முத்தம் தரும் மாற்றம்
காதல், பாசம், உறவுகளுக்கிடையேயான அன்பின் வெளிப்பாடாக முத்தம் பரிமாறப்படுகிறது.
உறவுகளை கட்டமைக்கும் முத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 6-ந் தேதி சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்தம் ஆரோக்கியத்தில் பல்வேறு நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது.
முத்தமிடும்போது எண்டோர்பின் ஹார்மோன் வெளியிடப்படும். இது உடலில் சுரக்கும் நல்ல உணர் திறன் கொண்ட ரசாயனமாகும். மன அழுத்தத்தை குறைக்கவும், சோர்வை விரட்டவும் உதவும்.
முத்தம் ஆக்ஸிடாஸின் வெளியீட்டையும் தூண்டும். இது பெரும்பாலும் `காதல் ஹார்மோன்' என்று குறிப்பிடப்படுகிறது. ஆக்ஸிடாஸின் தனிநபர்களிடையேயான உணர்வுகளையும், நெருக்கத்தையும் பிரதிபலிக்க துணைபுரியும்.
முத்தமிடுவதன் மூலம் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யலாம். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். முத்தமிடும்போது வெளிப்படும் பல நுண்ணுயிரிகள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு வலு சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சில நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கவும் உதவும்.
முத்தமிடும்போது முக சதைகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இது முக தசைகளுக்கு மிதமான உடற்பயிற்சியாகவும் அமையும். மேலும் முத்தமும் உடலில் சில கலோரிகளை எரிக்க உதவும். புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செயல்படுவதற்கு ஊக்குவிக்கும்.
முத்தமிடும்போது, உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கும். அப்போது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவும். நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தூண்டிவிடும். மேம்பட்ட வாய்வழி சுகாதாரத்திற்கும் வித்திடும். பல் சிதைவு அபாயத்தையும் குறைக்கும்.
முத்தம் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதுவும் லேசான உடற்பயிற்சியாக அமைந்து இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
முத்தம் சில நன்மைகளை கொண்டிருந்தாலும் தனி நபர்களின் சுகாதார நிலைமையை பொறுத்து மாறுபடலாம். ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்றுக்கள் பரவுவதற்கு முத்தம் காரணமாகக்கூடும். அதனால் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். துணையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.