வரவேற்பு அறையாக விளங்கிய திண்ணைகள்
முன்பெல்லாம் வீடுகளில் அவரவர் வசதிக்கேற்ப திண்ணைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் உள்ளூர் மரங்களோ, பர்மா தேக்கு மரங்களோ தூண்களாக மாறி அந்தத் திண்ணைகளில் இருந்து கிளம்பி வீட்டின் மேற்கூரையைத் தாங்கி நிற்கும்.
இத்தகைய வீடுகளில், வாசலைத் தாண்டி நுழைந்ததும் நம்மை முதலில் எதிர்கொள்வது இந்தத் திண்ணைகள்தான்.
சொல்லப்போனால், அந்தக் காலத்திய வாசற்திண்ணைகள்தான், வரவேற்பு அறைகளாக இருந்தன எனலாம். வீட்டு விசேஷங்களுக்கு வரும் உறவினர்களையும், அன்றாடம் சந்திக்க வீடு தேடி வருகிறவர்களையும் நண்பர்களையும் சந்திக்கக்கூடிய வரவேற்பறையாக அந்தக் காலத்தில் பயன்பட்டவை திண்ணைகள்தான்.
முற்காலத்தில் கல்விச் சாலைகள் ஊர்தோறும் திறக்கப்படாத காலகட்டங்களில் திண்ணைப் பள்ளிகள் மூலம் சிறுவர் சிறுமிகள் ஆரம்பக்கல்வி பெற்று, பிறகு அண்டை நகரங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு அனுப்பபட்டார்கள்.
திண்ணைகளில் அமர்ந்து, கண்ணாமூச்சி, தாயக்கட்டை, ஏழு கல், பரமபதம், பல்லாங்குழி போன்றவற்றை சிறுவர்களும் சிறுமிகளும் தத்தம் வீட்டுத்திண்ணைகளிலோ அல்லது தங்கள் நண்பர்களின் வீட்டுத் திண்ணைகளிலோ ஆடிக் களித்தார்கள்.
வெயில் கால இரவுகளில் காற்றாடப் படுத்து உறங்கும் கட்டிலாகவும் திண்ணைகள் பயன்பட்டன. திண்ணைகளால் இன்னொரு பயன்பாடும் உண்டு. இவ்வாறு வீடுதோறும் அனுபவித்து மகிழ்ந்த திண்ணைகள் காலமாற்றத்தில் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. எனவே அவற்றின் பயனை உணர்ந்து, வீடுகளில் வசதிப்பட்ட ஓர் இடத்தில் ஒரு சிறிய திண்ணையை உருவாக்கலாம் அல்லவா..?