மாடித்தோட்ட பிரச்சினைகள்
நல்ல நோக்குடன் மாடித் தோட்டம் போட தொடங்கிய பலர், எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தோல்வியை சந்தித்து கைவிடுவதுண்டு. அவர்கள் மீண்டும் தோட்டத்தைத் தொடர்வதற்கான சில யோசனைகள் இருக்கின்றன.
செடிகளுக்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கை சாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். கெட்டியாக ஊற்றினால் எறும்புகள் வரும். அடுத்த பிரச்சினை வெள்ளை அசுவினிப் பூச்சி. இதற்கு அடிப்படையான காரணம் அதிக நீர் அல்லது அதிக வறட்சியுடன் சத்தற்ற மண். நோய் எதிர்க்கும் ஆற்றல் குறைவும் காரணமாக இருக்கலாம்.
இலைகளை நுனிக்கிளையுடன் கவாத்து செய்து பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகவ்யம், குணபரசம், மோர் போன்றவற்றில் ஒன்றை வழங்கி மேலே பூச்சிவிரட்டி தெளிக்கவும். புதுத்தளிர் வரும். ஒரு வாரத்தில் பூக்கும். முயற்சி பலிக்காவிட்டால் செடியை பிடுங்கிவிட்டு, நன்கு மண் காய்ந்த பின் வேறுவிதை போடவும். சாதாரணமாக இந்த பிரச்சினை கத்திரி, வெண்டைக்கு ஏற்படும். கவாத்து செய்தால் புதுத்தளிர் வரும். முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் தினம் நீக்கினால் நோய் வராது.
புதுப்பயிரிடுதலை ஜூலை, ஆகஸ்டில் தொடங்கவும். சித்திரை, வைகாசிப் பட்டத்தில் காராமணி, அகத்தி, முருங்கை தவிர வேறு பயிர்கள் வராது. எனினும் மாடியில் பசுமை வலை அடித்தால் தாவரங்களை ஓரளவு காப்பாற்றலாம். முட்டைக்கோஸ், முள்ளங்கி, காரட், காலிபிளவர், லெட்யூஸ் போன்ற ஆங்கிலக் காய்கறிகள் பசுமை வலைக்குள் சிறப்பாக வளரும். தக்காளியும் சிறப்பாக வளரும். நாட்டுக் காய்கறிகளான கத்திரி, வெண்டை, அவரை, புடல், கீரைகளுக்கு நேரடியான சூரிய ஒளி ஜூலை- மார்ச் வரை கிட்டும். ஏப்ரல்-ஜூனில் மரப்பயிர்களும் காராமணியும் கோவையும் வளரும். கொடிப் பயிர்களில் கோவை நீண்டநாட்களுக்கு பலன் தரும். புடலை, பீர்க்கை, அவரை போன்றவற்றுக்கு 3, 4 மாதங்களுக்கு பின் புதிய விதை நட வேண்டும்.
செடிகள் வளர்க்க சிமெண்ட், பாலித்தீன் பைகள் 6 மாதங்கள் தாங்கும். பின்னர் பழைய சட்டை, புடவை, வேட்டி ஆகியவற்றால் சுற்றிக் கட்டிவிடலாம். பிளாஸ்டிக்கும் வெயிலில் பதமாகி உடைந்து நொறுங்கும். அதன் மீது துணியால் போர்த்தலாம். இரண்டு ஆண்டுவரை தாங்கும். பின்னர் பயிர் அழிந்தவுடன் புதிய பையில் மண்ணைப் போடலாம். இயற்கை உரம் இடுவதால் மண்ணில் சத்து இருக்கும். கூடியவரை நாம் வளர்க்கும் பயிர்களுக்கு நோய்களைத் தாங்கி வாழக்கூடிய பண்பை ஊட்ட வேண்டும்.