பழமையான சரஸ்வதி மஹால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூலகம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான நூலகம். இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் இந்த நூலகம் செயல்படுகிறது. இது சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 14-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகவும், அவர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்ததாகவும், பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில கல்வெட்டு ஆதாரங்களின்படி இந்த நூலகம், கி.பி.1122-ம் ஆண்டிலேயே இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலான பல மொழிகளில் உள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் உள்ளன. வரலாறு, மருத்துவம், அறிவியல், தத்துவம், மதம், இசை, நாட்டியம், சிற்பம் போன்ற பல கலைகளை பறைசாற்றும் சிறந்த நூல்களும் இருக்கின்றன. 1807-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட மெட்ராஸ் பஞ்சாங்கம் மற்றும் 1791-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் அச்சிடப்பட்ட பைபிள் போன்றவை இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. நூலக வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் குறித்த பல தகவல்களையும், ஆவணங்களையும் பார்வையாளர்கள் காணலாம்.
1918-ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரின் சந்ததியினர், இந்த நூலகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர். தற்போது இது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.