சென்னை பெண்களுக்கு மேரி ஆனி ஆற்றிய சேவை


சென்னை பெண்களுக்கு மேரி ஆனி ஆற்றிய சேவை
x

சென்னை பெண்களுக்காக மேரி ஆனி ஆற்றிய சேவையை இன்றும் மக்கள் போற்றுகிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள ஆங்கில மருத்துவர்களின் தலைவராக சர் ஜோசப் பிரேயர் என்பவர் இருந்தார். அவர் ஒரு கட்டுரையை எழுதினார். அதைப் படித்தார் மேரி ஆனி எனும் பெண். அவருடைய கணவர் வில்லியம் மேசன் ஸ்கார்லீப் 1866-ம் ஆண்டு முதல் சென்னையில் வக்கீலாகப் பணியாற்றியவர். இளம் வக்கீல்களுக்கான 'மெட்ராஸ் ஜூரிஸ்ட்' எனும் சட்ட இதழையும் நடத்தியவர் அவர்.

மருத்துவம் இன்றி தவிக்கும் அக்கால சென்னை பெண்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் என மேரி ஆனி முடிவு செய்தார். அதற்காக மருத்துவம் படிக்க விரும்பினார். தற்போதைய அரசு பொது மருத்துவமனையின் அப்போதைய தலைவராக இருந்த எட்வர்ட் பால்போரோடு பேசினார். அவரால்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆனி உள்ளிட்ட 4 பெண்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

3 குழந்தைகளுக்கு தாயான ஆனி, மருத்துவமனையில் நர்ஸ் ஆக சேவையாற்றிக் கொண்டே 3 ஆண்டு காலம் படித்தார். மருத்துவத்தில் பட்டம் படிக்க ஆனி இங்கிலாந்து சென்றார். அப்போது இங்கிலாந்தின் ஒரே பெண் டாக்டராக டாக்டர் எலிசபெத் ஆண்டர்சன் இருந்தார். அவர் நடத்திய பெண்களுக்கான மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார். தனது 37-வது வயதில் லண்டன் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கத்தோடு பட்டத்தையும் ஆனி வாங்கினார். மேற்படிப்புக்கான உதவித்தொகையும் பெற்றார்.

ராணி விக்டோரியாவை மேரி ஆனி சந்திப்பதற்கான வாய்ப்பை டாகடர் ஹென்றி ஏற்படுத்தித்தந்தார். இந்தியாவில் பெண் டாக்டர்கள் இல்லாமல் பெண்கள் படும் துயரை ராணியிடம் அவர் எடுத்துக்கூறினார். அவரது கோரிக்கையை ராணி ஏற்றுக்கொண்டார். 1883-ல் சென்னை திரும்பினார் ஆனி. பெண்களுக்கான மருத்துவமனையை சென்னையில் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். டாக்டர் எட்வர்டின் உதவியோடு பெண்களுக்கான 'விக்டோரியா ராணி மருத்துவமனை' என்ற பெயரில் நுங்கம்பாக்கத்தில் மூர் தோட்டம் என்னுமிடத்தில் டிசம்பர் 7-ந் தேதி இந்த மருத்துவமனை பிறந்தது.

சென்னையின் முதல் தலைமுறை பெண் மருத்துவர்களான மேரி பீடன், ஹில்டா மேரி லஷாருஷ், இ.மதுரம் ஆகியோர் உருவானார்கள். மேரி ஆனி 1887-ல் இங்கிலாந்து திரும்பினார். மேலும் மேலும் உயர் படிப்புகளைப் படித்தார். மகப்பேறியல் துறையில் இங்கிலாந்திலும் இங்கிலாந்தின் பல காலனி நாடுகளிலும் இருந்த மருத்துவர்களுக்கான தலைவர் ஆனார். 1930-ல் 85 வயதில் காலமானார். ஆனால், அவர் சென்னை பெண்களுக்காக ஆற்றிய சேவையை இன்றும் மக்கள் போற்றுகிறார்கள்.


Next Story