சிரிக்கும் கூக்கபுர்ரா


சிரிக்கும் கூக்கபுர்ரா
x
தினத்தந்தி 18 July 2023 3:15 PM GMT (Updated: 18 July 2023 3:16 PM GMT)

மரங்கொத்தி குடும்பத்திலுள்ள மிகப் பெரிய பறவை `சிரிக்கும் கூக்கபுர்ரா'. இந்த பெயர் பழங்குடி மொழியான வைரதூரியில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது.

இதன் தாயகம் கிழக்கு ஆஸ்திரேலியா ஆகும். ஆண், பெண் இரண்டுமே சிறகுகளின் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும். இந்த பறவையின் சத்தம் சிரிப்பது போலவே இருக்கும். ''கு-கு-கு-கு-பா-பா-பா" என்ற ரீதியில் இதன் சிரிப்பு சத்தம் இருப்பதால், பழங்குடியினர் இந்த பறவைக்கு 'சிரிக்கும் கூக்கபுர்ரா' என்று பெயரிட்டுள்ளனர். உண்மையில், 'கூக்கபுர்ரா' என்ற பெயர் "குகுகுபர்ரா" என்ற பெயரிலிருந்தே வந்ததாகும். இந்த பறவை இனம் பெரும்பாலும் யூக்கலிப்டஸ் மரங்களையே தங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளன. உணவை தேடுவதற்கும், கூடுகளை கட்டவும் இது போல பெரிய மரங்களை தேர்தெடுக்கின்றன. இப்பறவை வசந்த காலத்தில் அல்லது கோடையில் மூன்று முட்டைகள் வரை இடுகின்றன. முட்டைகள் குஞ்சு பொரிக்க 24 முதல் 29 நாட்கள் ஆகும்.

வேட்டையாடும் போது கூக்கபுர்ரா எங்கும் அசையாமல் அமர்ந்து, இரையையே நோக்கி கொண்டிருக்கும். தக்கசமயத்தில் பறந்து அலகுகளை பயன்படுத்தி இரையை தரையோடு அடித்து தனதாக்கிக் கொள்கின்றன. அவை சில நேரங்களில் தனது உருவத்தை விட பெரிய உயிரினங்களையும் வேட்டையாடுகின்றன. இந்த பறவைகள் 3 அடி நீளமுள்ள பாம்புகளையே பிடிப்பதாக அறியப்படுகிறது. பூச்சிகள், புழுக்கள், தவளைகள் ஆகியவற்றை தங்கள் உணவாக்கிக் கொள்கின்றன. கூக்கபுர்ரா 15-17 அங்குல நீளம் மற்றும் ஒரு பவுண்டு வரை எடையுள்ளதாக இருக்கும். பெண் பறவை, ஆண் பறவையை விட பெரியதாக இருக்கும். இந்த பறவை பெரும்பாலும் பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே காணப்படுகின்றன. இதன் சராசரி ஆயுட்காலம் 11-15 ஆண்டுகள் ஆகும். காடுகள் அழிப்பு, காட்டுத்தீ போன்ற காரணங்களால் இதன் வாழ்விடங்கள் வெகுவாக அழிந்து வருகின்றன.


Next Story