தூசு உறிஞ்சும் கருவியை வடிவமைத்தவர்..!


தூசு உறிஞ்சும் கருவியை வடிவமைத்தவர்..!
x

வாக்குவம் கிளீனரைத் தயாரித்து தந்துள்ளார், ஹியூபர்ட் சிஸில் பூத். 1901-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி முதலாவது வாக்குவம் கிளீனர் தயாரானது.

ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று வேளை வீடு பெருக்கி குப்பை அள்ளியது எல்லாம் ஒரு காலம். இன்று பல பேருக்கு 'டஸ்ட் அலர்ஜி'. முக கவசம் இல்லாமல் நடமாடவே முடியாது. இந்த நிலையில் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீட்டை பெருக்கி குப்பை அள்ளுவதெல்லாம் நடக்குற காரியமா? இதற்காகத்தான் வாக்குவம் கிளீனரைத் தயாரித்து தந்துள்ளார், ஹியூபர்ட் சிஸில் பூத் (Hubert Cecil Booth).

1871-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி இங்கிலாந்தில் பிறந்தார் இவர். பொறியியல் படித்தவர். கட்டிடவியல் மற்றும் இயந்திரவியலில் பட்டம் பெற்றார். 1892-ல் சிவில் என்ஜினீயராகப் பணிபுரிய ஆரம்பித்த இவர், 1901-ம் ஆண்டு லண்டனில் உள்ள எம்பையர் இசை அரங்கத்திற்கு சென்றார். அங்கு தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் இருந்து தூசு எடுக்க ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்துவதைக் கண்டார். அது சரியாக தூசுகளை உறிஞ்சி எடுக்கவில்லை.

'ஏன் நாமே ஒரு தூசு உறிஞ்சி எடுக்கும் சாதனத்தை கண்டுபிடிக்கக் கூடாது' என்று நினைத்தார். சில நாட்கள் கழித்து ஒரு ஓட்டலுக்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு இருக்கையின் பின்புறம் சென்று, அந்த இருக்கையின் மேல் வாயை வைத்து, 'தம்' பிடித்து காற்றை உள்ளிழுத்தார். ஏராளமான தூசுகள் அவரது தொண்டையை அடைத்தன. மூச்சுத் திணறினாலும், தான் நினைத்தது சரிதான் என்று உறுதி செய்துகொள்ள முடிந்ததை எண்ணி மகிழ்ந்தார்.

அதன்பின் இரவு பகல் பாராமல் வாக்குவம் கிளீனரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 1901-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி முதலாவது வாக்குவம் கிளீனர் தயாரானது. அதற்கான பிரிட்டிஷ் காப்புரிமையையும் பெற்ற சிஸில் பூத், ஒரு நிறுவனத்தை நிறுவி, வாக்குவம் கிளீனர்களை தயாரித்து விற்பனை செய்யவும் ஆரம்பித்தார்.

இவரது முதல் வாக்குவம் கிளீனர் இயந்திரம், ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடி சூட்டும் விழாவிற்கு முன்பு, அவர் உட்கார இருந்த சிம்மாசனத்தின் கீழ் விரிக்கப்பட்டிருந்த நீலநிறக் கம்பளத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் மகாராணியின் முன்னிலையில், பக்கிங்காம் அரண்மனையில் 1902-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி வாக்குவம் கிளீனரின் உபயோகம் குறித்த விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் இந்த இயந்திரத்தை 'பஃப்பிங் பில்லி' என்று அழைத்தார்கள். இது மிகவும் பெரிதாக இருந்தது. பெட்ரோலில் இயங்கியது. பின்னர் இயந்திரத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டாரைப் பொருத்தி மேம்படுத்தினார் பூத்.

தொழிற்சாலைகளுக்கு தேவையான வாக்குவம் கிளீனர்களையும் அவர் தயாரித்துக் கொடுத்தார். தவிர ஓட்டல்கள், ரெயில்வே ஸ்டேஷன்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களிலும் பூத்தின் வாக்குவம் கிளீனர்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் நவீன வடிவமாக வசதியானவர்களின் வீட்டில் எல்லாம் அல்ட்ரா மாடல் வாக்குவம் கிளீனர்கள் தூசுகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த கண்டுபிடிப்பின் மூலம் பெண்களின் 'குட் புக்கில்' இடம்பிடித்த சிஸில் பூத், 1955-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மறைந்தார்.


Next Story