இன்சுலின் கண்டுபிடிப்பாளர்..!
இன்சுலினை முதன்முதலாக ஆராய்ந்து அதன் வடிவங்களை துல்லியமாக விளக்கியவர்தான், உயிரி வேதியியல் அறிஞர் ப்ரெடெரிக் சாங்கர்.
சர்க்கரை நோய் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்சுலின் குறைபாட்டால் ஏற்படும் இந்நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் மாத்திரைகளையும், ஊசிகளையும் எளிதாக எடுத்துக்கொள்கிறோம். அப்படிப்பட்ட இன்சுலினை முதன்முதலாக ஆராய்ந்து அதன் வடிவங்களை துல்லியமாக விளக்கியவர்தான், உயிரி வேதியியல் அறிஞர் ப்ரெடெரிக் சாங்கர் (Frederick Sanger). இவரின் இந்த ஆராய்ச்சியில் இருந்துதான் சர்க்கரை வியாதிக்கு எதிரான மனிதனின் போராட்டம் தொடங்கியது எனலாம்.
இங்கிலாந்து நாட்டில் க்ளூசெஸ்டர்ஷயர் என்ற இடத்தில் 1918-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி பிறந்தார் ப்ரெடெரிக் சாங்கர். தனது ஆரம்பக்கல்வியை சிறப்பாக முடித்து விட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறையில் முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார். பின்னர் பேராசிரியராகவும், புரத வேதியியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
அந்த காலகட்டத்தில், மனித உடலுக்குள் புகும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான மருத்துவம் வளர்ந்திருந்ததே தவிர, நமது உடலுக்குள்ளேயே சுரக்கும் ஹார்மோன்களையோ, அமிலங்களையோ மருத்துவ உலகம் தொட்டுப் பார்க்கவில்லை. உடலின் இயக்கத்துக்கே அவைதான் அடிப்படை என்பதால், அதை ஆராய்ச்சி செய்ய ஒருவித தயக்கமும், மிரட்சியும் இருந்தது. அந்தத் தயக்கங்களை உடைத்தார் சாங்கர்.
இன்சுலின் என்ற ஹார்மோனை அவர் விடாது துரத்தி ஆய்வுகள் செய்தார். கடும் போராட்டத்துக்குப் பின் மனித இன்சுலினின் வேதியியல் வடிவத்தை கண்டறிந்து விளக்கினார். அதற்கு முன்பு வரை மாடு, பன்றி போன்ற விலங்குகளிடம் இருந்தே இன்சுலினை எடுத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தி வந்தனர். இது மனிதர்கள் உடலில் பலவித ஒவ்வாமையை ஏற்படுத்தியது. சாங்கரின் இன்சுலின் ஆராய்ச்சியால், முற்றிலும் செயற்கை முறையில் மனித இன்சுலினை தயாரிக்க முடிந்தது. இந்த சாதனைக்காக 1958-ம் ஆண்டில் சாங்கருக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இன்சுலினோடு தன் ஆராய்ச்சியை முடித்துக் கொள்ளவில்லை சாங்கர். மனிதனின் கருவமிலங்கள் என்று அழைக்கப்படும் டி.என்.ஏ, மற்றும் ஆர்.என்.ஏ போன்ற அமிலங்களையும் அவர் நுட்பமாக ஆராய்ந்தார். மனிதனுக்கு மனிதன் கைரேகைகள் மாறுபடுவது போல டி.என்.ஏ.வும் மாறுபடும் என்ற உண்மையை அவர் கண்டறிந்தார். இதற்காக, 1980-ம் ஆண்டு மீண்டும் அவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது. 'வேதியியல் துறையில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே அறிஞர்' என்ற பெருமை கொண்ட சாங்கர் தனது 95 வயது வயதில் மரணம் அடைந்தார்.
சாங்கரின் இன்சுலின் ஆராய்ச்சியால், முற்றிலும் செயற்கை முறையில் மனித இன்சுலினை தயாரிக்க முடிந்தது. இந்த சாதனைக்காக 1958-ம் ஆண்டில் சாங்கருக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.