உலக செவிலியர் தினம்


உலக செவிலியர் தினம்
x

செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது.

1953-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த டோரதி சதர்லேண்ட், முதன் முதலில் செவிலியர் தினத்தை முன்மொழிந்தார். ஆனால் அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு, 1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கொண்டு வந்த இந்த தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக செவிலியர் தினத்தின் கருப்பொருள் 'எங்கள் செவிலியர், நமது எதிர்காலம்' என்பதாகும்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஒரு புள்ளியியல் நிபுணர், சமூக சீர்திருத்தவாதி, மேலும் போரின் போது செவிலியராகவும் பணியாற்றினார். நவீன நர்சிங் துறையின் நிறுவனராகவும் அவர் கருதப்படுகிறார். அவர் 'கை விளக்கேந்திய காரிகை' என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுகிறார்.

சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ரஷ்யாவிற்கும் பிரிட்டனுக்கும் நடந்த கிரிமியப் போரின்போது, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தார். 1860-ல் நைட்டிங்கேல் பயிற்சி பள்ளியை நிறுவி, ஆர்வமுள்ள செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.

சமீபத்தில் கொரோனா தொற்றுடன் உலகம் போராடிய நேரத்தில், செவிலியர்களின் தியாகம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதில் பலர் தங்கள் உயிரை கூட இழந்தனர். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் ஆற்றிய தொண்டு மிகப்பெரியது. நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அவர்களுக்கு செய்யும் பணியை தங்கள் சேவையாக கருதி செய்கின்றனர். உலக சுகாதார பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் செவிலியர்களாகவே உள்ளனர். மருத்துவத் துறையில் செவிலியரின் பங்கு, மருத்துவரின் பங்கு போலவே உன்னதமானது. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களை நாம் பாராட்டுவது போல், சர்வதேச செவிலியர் தினத்தில், துணிச்சலான மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் செவிலியர்களின் பணியை நினைவுகூர வேண்டும்.


Next Story