சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
x
தினத்தந்தி 29 Jun 2023 10:00 PM IST (Updated: 29 Jun 2023 10:01 PM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித சமூகத்தை சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும்.

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது வேதனைக்குரிய அதிர்ச்சித் தகவல். போதைக்கு அடிமையாவோரில் 85 விழுக்காடு படித்தவர்கள். அதில் 75 விழுக்காடு இளைஞர்கள்.

மது, சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகி பின்னர் அதையும் தாண்டி கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. இவர்கள் மட்டுமின்றி இவர்களின் குடும்பங்கள், இவர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் என்று பலருடைய வாழ்வும் சீரழிகின்றது. தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டு நாட்டின் முன்னேற்றப் பாதைக்கே போதை தடையாக இருக்கிறது. உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

போதைப்பொருள்களைக் கடத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்படுத்து வோரின் குடும்பமும் பாதிக்கப்படுவதோடு பொருளாதார நெருக்கடியால் பரிதாபமான நிலையில் தற்கொைலகளும் நடந்து கொண்டிருக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. பொது இடங்களில் புகைத்தல், மது அருந்துதல் தென்படும் போது அதற்கான சரியான நடவடிக்கையை உடனுக்குடனே அரசு கண்டிப்பாக எடுத்தல் அவசியம். தலைக்கவசம் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிவித்து அபராதம் விதிக்கும் காவல்துறையினரின் நடவடிக்கை போதைப் பொருள்களாலும் உயிருக்கும் சமூகத்திற்கும் ஆபத்து என்பதைக் கண்டித்தும், தண்டித்தும் அவர்கள் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். திரைப் படங்களில்  போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.

மக்களுடைய நலன்களைக் கருதி போதைப்பொருள்கள்  அனைத்தையும் முற்றிலுமாக ஒழிக்க அரசு முன் வரவேண்டும். சட்டத்திற்கு விரோதமாக போதைப் பொருள் கடத்துவோர், பயன்படுத்துவோருக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்தியதால் சீர் கெட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமையாகும். சர்வதேச அளவில் போதைப்பொருளை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை உயிரை பறிக்கும் பான் மசாலா பொருட்களையும், குட்கா பொருட்களையும் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஆங்காங்கே விற்பனை நடைபெறுகிறது. போதைப்பொருளை ஒழிப்பது என்பது அரசின் கடமை மட்டுமல்ல நமது ஒவ்வொருவரின் கடமையும்தான்.


Next Story