வருமான வரிச்சுமை
வருமான வரிச்சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. வீட்டுக் கடன், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நமது வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன.
மனித வாழ்வில் தப்பிக்க முடியாதவை இரண்டு - ஒன்று மரணம், இன்னொன்று வருமான வரி என்று சொன்னார் ஆங்கில அறிஞர் பெஞ்சமின் பிராங்ளின். மரணத்தைத் தவிர்க்க முடியாது, ஆனால் தள்ளிப் போடலாம். வருமான வரியைத் தவிர்க்க முடியாது, ஆனால் குறைத்துக் கொள்ளலாம். வருமான வரிச்சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளதை நாம் அறிவோம். அவற்றில் சில செலவு சார்ந்த முறைகள்- வீட்டுக் கடன், சில கல்விச் செலவுகள், சில மருத்துவச் செலவுகள் ஆகியவை நமது வரிச்சுமையை குறைக்க உதவுகின்றன. இவற்றைத் தாண்டி சில முதலீட்டு முறைகளும் வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன. அதாவது, குறிப்பிட்ட சில இடங்களில், முறைகளில் நீங்கள் முதலீடு செய்தால், அந்தத் தொகைக்கு வரி செலுத்தாமல் விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் இந்த சலுகை.
இந்த முதலீட்டு முறைகள் வருமான வரி விதிகளின் 80-சி பிரிவின் கீழ் வருகின்றன. இந்த பிரிவின் கீழ் வரும் முதலீட்டு முறைகள் பல இருந்தாலும், மியூச்சுவல் பண்ட் சார்ந்த முறையே இவற்றுள் சிறந்தது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த முதலீட்டு முறை மட்டுமே பங்குச்சந்தை சார்ந்த மார்க்கெட் முதலீட்டு முறை. இருப்பவற்றுள் இதில் தான் அதிக லாப சாத்தியம் உள்ளது. மேலும், மற்ற முறைகள்(பிராவிடண்ட் பண்ட், ஐந்து வருட வங்கி வைப்பு நிதி) போன்றவை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் முடக்கி வைக்கப்பட வேண்டியவை. ஆனால் மியூச்சுவல் பண்ட் சார்ந்த வரி சேமிப்பு முதலீடுகள் மூன்று வருடங்கள் மட்டுமே பூட்டி வைக்கப்பட வேண்டும்.
இந்த முறையில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை கணிப்பது சுலபம். இந்த வருமான வரிப்பிரிவின் கீழ் முதலீடு தவிர இன்ன பிற விஷயங்களும் வருகின்றன. அவற்றில் முக்கியமானவை ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகையும், வீடு வாங்க எடுக்கப்பட்ட கடனின் மூலத்தவணைத் தொகையும் ஆகும். இவற்றிற்காகும் செலவுகள் தவிர்க்க முடியாதவை அல்லது தவிர்க்கப்படக் கூடாதவை (குறிப்பாக குடும்பப் பாதுகாப்பிற்கான டெர்ம் இன்ஷூரன்ஸ் தொகை). இவை போக ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தில் மீதமிருக்கும் தொகையில் எவ்வளவு முடிகிறதோ அதை அப்படியே வரி சேமிப்பு மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
பொதுவாக மியூச்சுவல் பண்டுகளில், குறிப்பாக பங்குச்சந்தை சார்ந்த பண்டுகளில், முதலீடு செய்வதை மாதத் தவணைகளில் செய்ய வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். ஆனால் வரி சேமிப்பு பண்டுகள் இதற்கு ஒரு விதி விலக்கு. எப்படியுமே மூன்று வருடங்கள் பணத்தைத் தொட முடியாது என்னும்போது, இத்தகைய தவணை முறைகளில் 'பரப்பிய' முதலீடு செய்யத் தேவையில்லை. மேலும் ஒவ்வொரு தவணையும் தனித் தனியாக மூன்று வருடங்கள் பூட்டப்படும் என்பதால், பின்னர் இதை நிர்வகிப்பது கடினமாகி விடும். ஆகையால், வரி சேமிப்பு பண்டுகளில் மொத்தத் தொகையாக முதலீடு செய்வதில் தவறில்லை, வசதியானதும் கூட. வீட்டுக் கடன், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நமது வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன. இவற்றைத் தாண்டி சில முதலீட்டு முறைகளும் வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன.