சுற்றுச்சூழல்
உலக அளவில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், எப்போதுமே ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் என்பது எவ்வாறு அமைகிறது என்பதை பார்க்கலாம்.
நாம் வாழ்கின்ற புவியும் அதனைச் சுற்றியுள்ள சூழலும் மிகவும் அற்புதமானது மட்டுமல்ல அபூர்வமானதும் கூட. இந்த பூமிப்பந்து, பல்வேறு வகையான நீர்- நிலவளங்கள், மலைகள், மண்வளங்கள் போன்ற இயற்கை காரணிகளாலும், சிறு செடி முதல் படர்ந்த பசுமைக் காடுகள், பூச்சிகள், மீன்கள், பலவகைப்பட்ட விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற உயிருள்ள காரணிகளாலும் இணைந்து பல்வேறு சூழ்நிலை மண்டலங்களாக உருவாகி உள்ளது.
ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிரற்ற மற்றும் உயிருள்ள காரணிகள் அனைத்தும், அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒருவகையில் கண்டிப்பாக இணைந்து செயல்பட்டாக வேண்டும். உதாரணமாக, அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ நீர் மிகவும் அவசியம். தண்ணீர், மழை மூலம் கிடைக்கிறது. தேவையான மழை பொழிவிற்கு அதிகப்படியான மரங்கள் அவசியமாகின்றன. இப்படியாக ஒரு உயிருள்ள காரணி, ஒரு உயிரற்ற காரணி என ஒவ்வொன்றும் இணைந்து, சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளன.
இந்த கட்டமைப்பின் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு இடர்பாடு ஏற்படுமானால், அங்குள்ள சுற்றுச்சூழல் வாழ்விடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, மரங்களும், காடுகளும் அழிக்கப்பட்டால் மழைவளம் குறைகிறது. மழை இல்லையென்றால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீர் குறைபாட்டால் உயிரினங்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் சுற்றுச் சூழலும் அதன்தொடர் நிகழ்வுகளும் அமைகின்றன.
இந்த பரந்துபட்ட பூமியையும், அதன் மீதுள்ள இயற்கை வளங்களையும் காப்பாற்றத் தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'உலக சுற்றுச் சூழல் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் 'பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்' என்பதாகும்.
மனிதன் தனது தேவைக்காக சுற்றுச்சூழல் மீது தொடுக்கும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். மரங்களை வெட்டுவது, காடுகளை அழிப்பது, இயற்கை வளங்களை சுரண்டுவது, பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவேண்டும். மரங்களை வளர்ப்பது, மாசுபாட்டைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
இயற்கையும், சுற்றுச்சூழலும் தன்னைத் தானே கட்டமைத்துக் கொண்டு, தனது பருவகால நிலைகளை சரியாக கணித்துக்கொண்டு, மனித குலத்திற்கு மகத்தான நன்மைகளை செய்து வருகிறது. அந்த இயற்கைக்கும் அதன் வளங்களுக்கும் தீமை ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை காக்க உறுதி ஏற்போம்.