தூக்குமேடையிலும் வீரம் காட்டிய பகத்சிங்


தூக்குமேடையிலும் வீரம் காட்டிய பகத்சிங்
x

தூக்கு மேடையிலும் போராடிய பகத்சிங்போல் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் உயிர் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் இது.

பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் மாவட்டத்தில் பங்கா என்ற கிராமத்தில் 1907-ம் ஆண்டு சர்கார்கிசன்சிங்-வித்யாவதி தம்பதியருக்கு 2-வது மகனாக பிறந்தவர் பகத்சிங். இவருடைய தந்தை, சித்தப்பா அனைவருமே தேசத்தொண்டர்கள். பகத்சிங்கின் சித்தப்பா சர்தார்சிங் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய்க்கே அரசியல் குருவாக இருந்தவர். மற்றொரு சித்தப்பா சுவர்ன்சிங் தன் வீரமான பேச்சால் நாட்டில் சுதந்திர வேட்கைக்கு கனல் மூட்டியவர்.

பகத்சிங் படிக்கும் காலத்திலேயே நவஜவான், பாரத் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளை தொடங்கியவர். இவருடைய மனைவி துர்காபாயும் கணவருக்கு ஏற்ற மனைவியாய் இருந்தார். சுதந்திரபோராட்டத்தில் பகத்சிங் ஈடுபட்டபோதெல்லாம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.

ஒரு சமயம் கான்பூரில் புரட்சி வெடித்தது. அப்போது நடைபெற்ற கொள்ளையில் தொடர்பு இருப்பதாக கூறி பிஸ்மல் என்பவருக்கு ஆங்கில அரசு தூக்குத்தண்டனை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட பிஸ்மலை சிறையில் சென்று சந்தித்தார் பகத்சிங். அந்த சந்திப்புதான் பகத்சிங்கை ஒரு தேச பக்தி புரட்சியாளராக்கியது.

1919-ம் ஆண்டு இந்தியாவிலுள்ள அமிர்தசரஸ் என்ற இடத்தில் ஒரு மாபெரும் கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளோடு கலந்துகொண்டனர். அப்போது ரெஜினால் டயர் என்ற ஆங்கில அதிகாரி தலைமையில் அங்கு வந்த ஆங்கில படை அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது. இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

படுபாதக சம்பவம் நடந்த அந்த இடத்துக்கு பகத்சிங் சென்றார். பல உயிர்களின் ரத்தம் கலந்த அந்த மண்ணை கைகளில் எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்தார். நம் நாட்டில் இனி இதுபோல் எந்த ஆணவக்கொலையும் நடக்க கூடாது, வெள்ளையர்களை விரட்டியே ஆகவேண்டும் என்று மனதுக்குள் சபதம் ஏற்றார் பகத்சிங். ஆனால் அதன் பின்னர் 1922-ம் ஆண்டு கோரக்பூரில் மீண்டும் சவுரிசவுரா வன்முறை சம்பவம் அரங்கேறியது. அப்போது நாடெங்கும் கொதித்த மக்களை சமாதானப்படுத்த ஆங்கில அரசு சைமன் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. அந்த குழுவை பகத்சிங் உள்பட அனைத்து தலைவர்களுமே எதிர்த்தார்கள். சைமன் குழுவே திரும்பி செல் என்று ஆங்காங்கே கூட்டங்கள், ஊர்வலங்கள் நடந்தது. அதுபோன்ற ஒரு ஊர்வலத்தில்தான் லாலா லஜபதிராய் தடியடியில் காயமடைந்தார். இந்த சம்பவம்தான் பகத்சிங்கை அகிம்சை வழியில் இருந்து மாறி ஆயுதம் ஏந்தி போராட வைத்தது.

இந்த நிலையில்தான் தன்னுடைய நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடன் சேர்ந்து 1929-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் நாள் புதுடெல்லியில் இருந்த மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசினார் பகத்சிங். இதனால் பகத்சிங்கும், ராஜகுருவும், சுகதேவும் கைது செய்யப்பட்டார்கள். 3 பேருக்கும் ஆங்கிலேய நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இதற்கிடையே லாலாலஜபதிராயின் மரணத்துக்கு காரணமான சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கும் பகத்சிங் மற்றும் அவரின் கூட்டாளிகளின் மேல் சுமத்தப்பட்டது. சிறையில் இருந்தபோதே விசாரணை நடந்தது. அதன் முடிவில் ஆயுள் தண்டனை தூக்குத்தண்டனையாக மாற்றப்பட்டது.

1931-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதிதான் பகத்சிங்கையும், ராஜகுருவையும், சுகதேவையும் தூக்கிலிடவேண்டும். ஆனால் அதற்கு முன்தினம் இரவு 7½ மணிக்கே பகத்சிங்கின் அறைக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் அதிகாரிகள் வந்து அழைத்தனர். அப்போது லெனின் எழுதிய புத்தகத்தை படித்து கொண்டு இருந்த பகத்சிங், கொஞ்சம் பொறுங்கள் "ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனுடன் கலந்துரையாடிக் கொண்டு இருக்கிறான்" என்று கூறி 5 நிமிடத்தில் அந்த புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட்டு தூக்கு மேடை நோக்கி சென்றார் பகத்சிங். தூக்கு மேடை ஏறிய பின்னர் முகத்தில் கருப்பு துணியை கட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த மாவீரன் பகத்சிங் தான் நேசித்த இந்திய மண்ணை பார்த்துக்கொண்டே தூக்கு கயிற்றை முத்தமிட்டார். தூக்கு மேடையிலும் போராடிய பகத்சிங்போல் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் உயிர் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் இது. அவர்களை நேசிப்பது நமது கடமை.


Next Story