இருட்டைப் பார்த்து பயப்படுகிறீர்களா..?
இருட்டை பார்த்தும், திகில் கதைகளை கேட்டும் குழந்தைகள் பயப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இவை தவிர, இன்னும் நிறைய விஷயங்களுக்கு பய உணர்வு ஏற்படும். குறிப்பாக குழந்தைகளையும் தாண்டி பெரியவர்களும் இதுபோன்ற பய உணர்விற்கு ஆளாகிறார்கள்.
அத்தகைய அதீத பயத்தை 'போபியா' என்பார்கள். மனோதத்துவப்படி, ஆயிரக்கணக்கான போபியாக்கள் உலகெங்கும் நிறைந்திருக்க, அவற்றில் முக்கியமானவற்றை இங்கு பார்ப்போம்...!
* சிலர் பூனையைக் கண்டால் பயப்படுவார்கள். அதற்கு ஆங்கிலத்தில் ஐலுரோபோபியா என்று பெயர்.
* சிலந்தியைக் கண்டால் சிலருக்கு பயம் ஏற்படும். அதற்கு அரக்னேபோபியா என்று பெயர்.
* சிலருக்கு நாயைக் கண்டால் காரணமின்றி பயம் உண்டாகும். அதை ஸைனோபோபியா என்கிறார்கள்.
* சிலர் பாம்பைக் கண்டாலே அலறி நடுங்குவார்கள். அது, அபிடியோபோபியா.
* சிலருக்கு கம்பளிப் பூச்சியைக் கண்டால் உடம்பெல்லாம் அரிப்பது போன்ற கற்பனை உணர்வும், எறும்பைக் கண்டால் உடம்பெல்லாம் கடிப்பது போன்ற கற்பனை உணர்வும் உண்டாகும். அதற்கு பெடிக்குலோபோபியா என்று பெயர்.
* சிலருக்கு பொதுவாக பிராணிகளைக் கண்டாலே ஒருவித பயம் ஏற்படும். அதற்கு ஜூபோபியா என்று பெயர்.
* சிலருக்கு இருட்டைக் கண்டாலே பயம். அப்படிப்பட்ட உணர்வை ஸ்கோட்டோபோபியா என்கிறார்கள்.
* சிலருக்கு கடலை கண்டால் பயம். அதை தாலஸ்ஸோபோபியா என்பார்கள்.
* சிலருக்கு தீயை கண்டால் பயம். அதற்கு தெர்மோபோபியா என்று பெயர்.
* சிலருக்கு மழை பெய்வதை அல்லது பெய்யப் போவதை நினைத்தாலே பயமெடுக்கும். அதற்கு ஆம்ப்ரோபோபியா என்று பெயர்.
* சிலருக்கு பிணங்களையும், இறந்த பிராணிகளையும் பார்த்தால் ஒரு வகை பயமும், தொடர் அருவருப்பும் ஏற்படும். அதை டோராபோபியா என்பார்கள்.
* சிலர் மனித சஞ்சாரமற்ற வெட்டவெளியில் தனியே இருக்க பயப்படுவார்கள். அதற்கு ஆங்கிலத்தில் அகோராபோபியா என்று பெயர்.
* ஒரு சிலருக்கு மற்றவர் தங்களை தொட்டாலோ, இடித்துக்கொண்டு போனாலோ ஒரு வகை அருவருப்பும், பயமும் ஏற்படும். அதற்கு ஹபிபோபியா என்று பெயர்.
* சிலர் தங்கள் உடலில் தாங்க முடியாத வலி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பயப்படுவார்கள். அதை ஆல்கோபோபியா என்கிறார்கள்.
* சிலர் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக மற்றவர்கள் தங்களை கேலி செய்வார்களோ என்ற பயத்தைக் கொண்டிருப்பார்கள். அதற்கு கேட்டகெலோபோபியா என்று பெயர்.
* சிலருக்கு ஒரு சில வாசனைகள் அருவருப்பையும், ஒருவித பயத்தையும் உண்டு பண்ணும். அதற்கு ஆஸ்மோபோபியா என்று பெயர்.
* சிலருக்கு தங்களை யாராவது உற்றுப் பார்த்தாலோ, முறைத்துப் பார்த்தாலோ மனதில் ஒருவித பயம் தோன்றும். அதற்கு ஸ்கோபோபோபியா என்று பெயர்.