சிற்பக் கலையில் அசத்தும் இளைஞர்...!


சிற்பக் கலையில் அசத்தும் இளைஞர்...!
x
தினத்தந்தி 2 April 2023 1:45 PM GMT (Updated: 2 April 2023 1:45 PM GMT)

சிற்பக் கலையில் பல புதுமைகளை வடித்து, பல விருதுகளை வென்று, அசத்தி வரும் ராம்குமார் கண்ணதாசனிடம் சிறுநேர்காணல்...

* உங்களை பற்றிய சிறு அறிமுகம்?

தேனி அருகே இருக்கும் காமய கவுண்டன் பட்டி என்னுடைய பூர்வீகம். அதன் அருகில் இருக்கும் அரசுப்பள்ளியில் கல்வி பயின்றேன். சிறுவயதில் இருந்தே, கலை ஆர்வம் அதிகம் என்பதால் அதுபற்றி விரிவாக படிக்க ஆசைப்பட்டேன். அப்போதுதான், சென்னை எழும்பூர் பகுதியில் இயங்கும் மிக பழமையான பைன் ஆட்ஸ் கல்லூரி பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நம் இந்தியாவிலேயே, சென்னை பைன் ஆட்ஸ் கல்லூரிதான் மிகவும் பழமையானது. 172 வருட பாரம்பரியம் கொண்டது. அத்தகைய பாரம்பரிய கலை கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதல் முயற்சியில் தோல்வியடைந்தேன். இரண்டாம் முயற்சியில்தான், அங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, 'ஸ்கல்ப்சர்' எனப்படும் சிற்பக்கலை பயிலும் வாய்ப்பு கிடைத்தது.

* சிற்பக்கலையில் உங்கள் திறமையை வளர்த்து கொண்டது எப்படி?

சென்னை பைன் ஆட்ஸ் கல்லூரியில் சிற்பக்கலை தொடர்பான எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். பாறை சிற்பங் கள் மட்டுமின்றி, எல்லாவிதமான சிற்பக்கலையையும் கற்றுக்கொண்டேன். அதேசமயம், சென்னையில் இயங்கும் லலித் கலா அகாடெமியில் கலை பயிற்சி மேற்கொண்டேன்.

இளங்கலை படிப்பை முடித்தவுடன், டெல்லி ஆட்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மிகவும் பழமையான கல்லூரி என்பதால், அங்கு சென்று படித்தேன். அங்கு படித்தபோதும், டெல்லி லலித் கலா அகாடெமியில் கலை பயிலும் வாய்ப்பு கிடைத்தது. இப்படியாக நிறைய கற்றுக்கொண்டேன்.

என்னுடைய வேலைப்பாடுகள், தனித்துவமாகவும் புதுமையாகவும் இருந்ததால், முதுகலை பட்டம் பெற்றவுடன் டெல்லி பைன் ஆட்ஸ் கல்லூரியிலேயே விசிட்டிங் பயிற்றுனராக வேலை கிடைத்தது. அதேசமயம், நிறைய அரசு மற்றும் அரசு உதவிபெறும் அமைப்புகளின் புராஜெக்டுகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி, என் திறமைகளை மெருகேற்றிக் கொண்டேன். இந்தியா முழுக்க என்னுடைய சிற்பங்களை நிலைநாட்டினேன்.

* உங்களது கைவண்ணத்தில் உருவான சிற்பங்களை பற்றி கூறுங்கள்?

நாக்பூர், ஐதராபாத், உதய்பூர், மும்பை, பாராமதி, கேரளா, டெல்லி... இப்படி இந்தியாவின் பல பகுதிகளை, நான் உருவாக்கிய சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கல் சிற்பங்கள் மட்டுமல்ல, இரும்பு கழிவுகளில் உருவான மறுசுழற்சி சிற்பங்களும் இருக்கின்றன.

குறிப்பாக, டெல்லியின் நிஜாமுதின் பகுதியில் பழைய இரும்புக் கழிவுகளை கொண்டு, 7 உலக அதிசயங்கள் உருவாக்கப்பட்டன. மத்திய அரசின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட புதுமையான சிற்பங்கள் அவை. டெல்லியில் பல்வேறு காரணங்களால் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை, மறுசுழற்சி செய்து அதில் உலக அதிசயங்களை அச்சு வடித்தாற்போல, பழைய இரும்பு கழிவுகளில் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதை வடிவமைக்கும் குழுவில், நானும் ஒருவனாக அங்கம் வகித்தேன்.

சிற்பக்கலை வல்லுநர்கள், உலகப்புகழ் பெற்றவர்கள் அங்கம் வகித்த அந்த குழுவில், எனக்கும் இடம் கிடைத்தது. மேலும், பைசா கோபுரத்தை வடிவமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. காரின் கிளட்ச் பிளேட், சக்கர ரிம்... இப்படி எனக்கு வழங்கப்பட்ட பொருட்களை கலைநயமாக பயன்படுத்திக் கொண்டு, எனக்கான கலை அங்கீகாரத்தை டெல்லியில் நிலைநாட்டினேன். நிறைய கலைஞர்கள், அதை பார்த்து வியந்து பாராட்டினர். இன்றும் டெல்லியில் வீற்றிருக்கும், அந்த 7 உலக அதிசயங்களில் என்னுடைய கலைப்படைப்பும் மிளிர்கிறது.

மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில், குப்பை கழிவுகளில் பல விழிப்புணர்வு சிற்பங்களை உருவாக்கி இருக்கிறேன்.

* உங்களுடைய படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?

நிறையவே கிடைத்திருக்கிறது. 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில், லலித் கலா அகாடெமியில் தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல பயிலரங்கம், ஸ்காலர்ஷிப், பயிற்சி பட்டறைகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. குறிப்பாக, மினிஸ்டரி ஆப் கல்சர் சார்பாக இரு முறை ஸ்காலர்ஷிப் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். சமீபத்தில் கூட, பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக இங்கிலாந்து சென்று, அங்கு 3 மாத பயிற்சி பெற இருக்கிறேன். இது மிகவும் அரிதான வாய்ப்பு. அவ்வளவு சுலபமாக கிடைத்து விடாது. நானும் கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து தான், இந்த அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். மேலும் 2011-ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை... 20-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் என்னுடைய படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

* உங்களுடைய ஆசை என்ன?

நம் தமிழ்நாட்டை ஒப்பிடுகையில், சிற்பக்கலையையும், சிற்பக்கலைஞர்களையும் மற்ற மாநிலங்கள் சிறப்பாக நடத்துகிறது. அவர்களை வருடந்தோறும் ஒருங்கிணைத்து, பல்வேறு சிற்பக்கலை பயிற்சி முகாம்களை ஒருங்கிணைப்பது, அந்தந்த மாநிலங்களின் பிரபல நகரங்களை அழகு படுத்துவது... என சிற்பக்கலைஞர்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால், மிகவும் தொன்மையான பைன் ஆட்ஸ் கல்லூரி அமைய பெற்ற தமிழ்நாட்டில், இதுபோன்ற முன்னெடுப்புகள் மிக குறைவாகவே இருக்கிறது. அதை ஏதாவது ஒரு வழியில், அதிகப்படுத்தி சிற்பக்கலைஞர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர ஆசைப்படுகிறேன்.

மேலும் நான் பிறந்து வளர்ந்த கம்பம் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், யானைகள் மீது தனி பிரியம் உண்டு. அவை... இயற்கையின் அருட்கொடைகளையும், மனிதர்களின் செயற்கை தவறுகளையும் எனக்கும் சுட்டிக்காட்டுகின்றன. அதை முன்னிறுத்தி, இயற்கையை மேம்படுத்தும் விழிப் புணர்வுகளை ஏற்படுத்தும் ஆசையும் உண்டு.

* உங்களுடைய பலம் என்ன?

கற்கள் போன்ற கடினமான பொருட்களில் சிற்பம் செய்ய பழகியதால், களிமண் மற்றும் செராமிக் கொண்டும் சிற்பங்களைஉருவாக்க முடியும். இவ்விரண்டும் வெவ்வேறு கலை வடிவங்கள் என்றாலும், நான் அவ்விரண்டிலும் பயிற்சி பெற்றிருக்கிறேன். இவ்விரண்டையும், ஒன்றாக இணைத்து புதுமையான கலைவடிவங்களை உருவாக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். மேலும் நம் வீதியெங்கும் குப்பைகளாக சிதறி கிடக்கும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை கொண்டும் சிற்பம் செதுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.


Next Story