இந்தியாவின்... அரிசி ஏற்றுமதி தடையால் தவிக்கும் உலக மக்கள்


இந்தியாவின்... அரிசி ஏற்றுமதி தடையால் தவிக்கும் உலக மக்கள்
x

சில நாட்களுக்கு முன்னால் இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், அமெரிக்காவில் விற்பனை அங்காடியில் அரிசிக்காக மக்கள் அலைமோதும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கும்.

இந்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதே இதற்கான காரணம். இந்த செய்தியின் எதிரொலியாகவே, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், வரும் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து, நீண்ட வரிசையில் நின்று மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி சென்றனர்.

சரி, அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்தியா, ஏன் அரிசி ஏற்றுமதியை தடை செய்தது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையினால் உலக சந்தையில் எத்தகைய மாற்றம் ஏற்படும், எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும் என்பது போன்ற தகவலை விரிவாக தெரிந்து கொள்வோமா...?

* தடைக்கான காரணம் என்ன?

வட மாநிலங்களில் பருவம் தவறி பெய்யும் கனமழையினால் அரிசி பயிர்கள் சேதமடைந்திருப்பதாகவும், ஒருசில மாநிலங்களில் மழை பெய்ய தவறியதால் போதிய விவசாயம் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் போதிய அளவுக்கு அரிசி இருப்பை உறுதிப்படுத்தவும், உள்நாட்டில் அரிசி விலை உயர்வைத் தடுக்கவும் இந்தத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது. இதன் விளைவாக உலக உணவு சந்தையில் தேவை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

* இந்தியாவின் அரிசி தடையினால், உலக சந்தை ஏன் அதிர்ச்சியாகிறது?

உலக அளவில், அரிசி உற்பத்தியில் சீனா முதலிடம் வகித்தாலும், அரிசி ஏற்றுமதியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இவ்வளவு ஏன்..? சீனாவும் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது.

பல நாடுகள் அரிசி ஏற்றுமதி செய்தாலும் இந்தியா விட்டு சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை. இதனால் அரிசி சந்தை யில் 11 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அரிசி தட்டுப்பாடு மற்றும் திடீர் விலையேற்றத்தின் காரணமாகவே அரிசியையே உணவாக கொண்டிருக்கும் உலக மக்கள் மத்தியில் பேரதிர்ச்சி உருவாகி உள்ளது.

* அரிசி ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு என்ன?

இந்தியா 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்கிறது. 2021-22-ம் ஆண்டில் 9.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள 21.21 மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. 2022-ம் ஆண்டில் ஒட்டுமொத்த உலக அரிசி ஏற்றுமதி 5.54 கோடி டன்னாக இருந்தபோது, இந்தியாவின் பங்கு மட்டும் சுமார் 2.22 கோடி டன்னாக இருந்தது. கிட்டத்தட்ட உலக அரிசி சந்தையில் இந்தியாவின் அரிசிகளே பாதிக்கும் மேல் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. இதில் பாஸ்மதி அல்லாத அரிசி மட்டும், சுமார் 1.8 கோடி டன்னாகும்.

உலகின் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் வரை இந்தியா பங்கு வகிக்கும் நிலையில் இந்த தடை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

* நம்முடைய அரிசி ஏற்றுமதி தடையால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்?

அமெரிக்காவில் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வரிசை கட்டி நிற்பதை நாம் பார்த்துவிட்டோம். ஆனால் அமெரிக்கா மட்டுமல்லாமல் வங்காளதேசம், நேபாளம், செனகல், கேமரூன், பெனின், ஜிபூட்டி, கினியா, அங்கோலா, ஐவரி கோஸ்ட் மற்றும் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள், ஈரான், ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்கிறது.

தடை செய்யப்படாத பாஸ்மதி அரிசி ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. செப்டம்பர் 2022-ம் ஆண்டு, இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசிக்கு 20 சதவீத வரி விதித்தது. அப்படி இருந்தும் கடந்த நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 8.46 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.

* எல்லா நாடுகளிலும் அரிசி விளையாதா?

இல்லை. உலகின் எல்லாப் பகுதிகளிலும் அரிசி விளைவதில்லை. பல நாடுகள் முற்றிலும் இறக்குமதி அரிசியை நம்பியே இருக்கின்றன. சுமார் 3 பில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு அரிசி பிரதான உணவாகும். இந்தியா விதித்துள்ள தடையால் ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, சிரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளும் பாதிக்கப்படும். இந்த நாடுகள் அனைத்தும் ஏற்கனவே அதிக உணவு விலை பணவீக்கத்துடன் போராடி வருகின்றன.

ஆப்பிரிக்க நாடுகளின் 75 சதவீத அரிசி தேவையை இந்தியாவே பூர்த்தி செய்கிறது. இந்தியாவின் வெற்றிடத்தை, நிரப்புவது மற்ற அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு கடும் சவாலாகவே இருக்கும்.

* இந்தியாவில் எங்கெல்லாம் அரிசி விளைவிக்கப்படுகிறது?

மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், தெலுங்கானா, அரியானா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இந்திய நாட்டின் அதிக அரிசி உற்பத்தி மாநிலங்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொதுவாக 19 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது. விளைச்சல் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 72.65 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலக அரங்கில் அரிசிக்கு இவ்வளவு தேவை இருந்தும் அதனை விளைவிக்கும் விவசாயி களின் போராட்ட வாழ்க்கை நிலை மாறாமல் அப்படியே இருப்பது வேதனைக்குரியதுதான்!

* இந்தியாவின் தடை, எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?

உணவு பஞ்சம், அரிசி தட்டுப்பாடு, நிலையற்ற விலை நிர்ணயம்... போன்ற பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும், இந்த தடைக்கு பிறகு அரிசி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்பிரிக்காவில் அரிசி வகைகளை பயிரிடுவதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தடை செய்யப்படலாம் என்ற செய்தியால் இந்திய அரிசி ஆலைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.


Next Story