காதுகேளாமையை இல்லாமல் ஆக்குவோம்


காதுகேளாமையை இல்லாமல் ஆக்குவோம்
x

‘‘உலக காது கேளாமை குறித்த விழிப்புணர்வு நாள்’’ புகைப்படத்தில் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவியான ரிஸ்வானாவின் படம் இடம்பெற்றது.

உலக சுகாதார நிறுவனமான டபிள்யூ.எச்.ஓ.வின் இந்திய பிரிவு சமீபத்தில் வெளியிட்ட ''உலக காது கேளாமை குறித்த விழிப்புணர்வு நாள்'' புகைப்படத்தில் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவியான ரிஸ்வானாவின் படம் இடம்பெற்றது. இதிலென்ன சிறப்பு இருக்கிறது என்று நம்மில் பலருக்கு தோன்றும். ஆம்..! தற்போது இறுதியாண்டு மருத்துவம் படித்து வரும் ரிஸ்வானா பிறக்கும் போதே காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவரது பெற்றோர் கடும் உழைப்பு மற்றும் போராட்டத்துக்கு நடுவே, சாதுர்யத்துடனும், அறிவுடனும், விழிப்புணர்வோடும் செயல்பட்டு மகளுக்கு இருந்த செவித்திறன் குறைபாட்டை உடனே கண்டறிந்தனர். அதற்குரிய நவீன சிகிச்சையான காக்ளியர் இம்ப்ளாண்ட்டை பொருத்தி தங்களது மகள் நன்றாக கேட்கவும், பேசவும், படிக்குமாறும் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில், அவர் தற்போது டாக்டராகப் போகிறார் என்று எண்ணும் போது நவீன மருத்துவ அறிவியலின் முக்கியத்துவத்தையும், காது கேளாமை பிரச்சினை குறித்த விழிப்புணர்வையும் நாம் அனைவரும் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது தெரியவரும்.

ரிஸ்வானாவின் தந்தை அப்துல் ரசீத் கூறும்போது... ''ஆலப்புழா சொந்த ஊர். அங்கு பேக்கரி கடை நடத்தி வருகிறேன். மனைவி சபிதா. மூத்த மகள் ரிஸ்வானா. கோட்டயம் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மகன் ஷிஹாபுத்தீன் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.

எனது மகளுக்கு சுமார் 1½ வயது இருக்கும் போது காது கேளாமை குறித்து தெரியவந்தது. உடனடியாக அவளுக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்து, அதற்கான சாத்தியக்கூறுகளை தேடினோம். அதுவரை பேச்சுப்பயிற்சிக்கான தெரபி சிகிச்சை கொடுத்து வந்தேன்.

2003-ம் ஆண்டு அவளுக்கு 5 வயது ஆகும் போது காக்ளியர் அறுவை சிகிச்சை செய்தேன். கேரளாவில் இந்த அறுவை சிகிச்சை செய்தவர்களில் 51-வது குழந்தை எனது மகள். இதற்காக வீடு மற்றும் நிலத்தை விற்று அந்த பணத்தில் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சையில் மூளைக்குள் உள்ள காக்ளியஸ் பகுதியில் ஒரு கருவியும், காதுக்கு பின்புறம் ஒரு வெளிப்புற கருவியும் பொருத்தப்படும். இவை பழுதானால் சர்வீஸ் செய்ய ரூ.50 ஆயிரம் செலவாகும்'' என்றார்.

இவரை தொடர்ந்து, ரிஸ்வானா பேசுகையில்... ''நான் சிறுகுழந்தையாக இருந்த போது காது கேட்காத தால், பேச முடியாமல் சிரமப்பட்டேன். பின்னர் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு தேவையான சிகிச்சையை வழங்கினர். இறைவனின் கிருபையால் தற்போது நான் கேட்கும் திறனை பெற்றுள்ளேன்.

காது கேளாமை குறைபாட்டினால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தேன். ஆனால், குடும்பத்திலும், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் எந்த தொந்தரவும் இருந்த தில்லை. சிறப்பு பள்ளிக்கு பதிலாக சாதாரண பள்ளியில் சேர்ந்து படித்தேன். எனது சக மாணவர்களுடன் எந்த வேறுபாட்டையும் உணரவில்லை. நான்தான் 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளியில் முதல் மாணவி என்பதால் பிரச்சினை ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. அத்துடன் நான் மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் புலமை பெற்றுள்ளேன்.

கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவ சேர்க்கையின் போது கோட்டயம் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. அப்போது உலக சுகாதார நிறுவனத்தின் காக்ளியர் குறைபாட்டு விழிப்புணர்வு தூதர் பிரெட்லி கேரளா வந்திருந்தபோது, திருவனந்தபுரம் கே.எஸ்.எஸ்.எம். இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் அஸீல் மூலம் அறிமுகமானார்.

செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் படிப்பில் முன்னேறி எந்த நிலையையும் அடையலாம் என்ற உலக சுகாதார நிறுவன விழிப்புணர்வு பிரசாரத்தில் எனது படம் பிரசுரம் செய்யப்பட்டது. இந்த குறைபாட்டை மறைக்காமல் சமூகத்தில் நாமும் பெரிய ஆளாக வர முடியும் என்பதற்கான விழிப்புணர்வு தான் அது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னைப்போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் வாழும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எந்த குறைபாடும் இல்லாத சாதாரண மனிதர்களுக்கும் சிரமங்கள் சவால்கள் உண்டு. கடின உழைப்பால் மட்டுமே நாம் தடைகளை தகர்த்து வெற்றிப்படிக்கட்டில் முன்னேற முடியும். மாற்றுத்திறனாளிகள் கூடுதலாக கடின உழைப்பு செய்தால் சாதிக்க முடியும்'' என்றார்.

நாம் எவ்வளவு சீக்கிரமாக காது கேளாமையை கண்டறிகிறோமோ அந்தளவு செவித்திறனை பெற முடியும். காக்ளியர் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் முதல் தாராளமாக செய்யலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பிறவியிலேயே காது கேளாமை நோய்க்கு ஆளான குழந்தைகளை பிறந்த உடனேயே கண்டறிய, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிரத்யேகமான மையங்கள் செயல்படுகின்றன. அங்கு, செவி ஒலி உமிழ்வு தொழில்நுட்பத்தை (OTO ACOUSTIC EMISSION) பயன்படுத்தி ஒலிபுகா அறையில் பிறந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இலவசமாக பரிசோதிக்கப்படுகிறது.

அப்படி பிறவிலேயே காது கேட்கும் திறன் குழந்தைகளுக்கு இல்லாமல் இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. நலிவுற்ற குடும்பத்தில் பிறந்த அத்தகைய குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசே காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை இலவசமாக வழங்குகிறது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை இப்போதும் தொடர்கிறது.

ஒரு காக்ளியர் இம்ப்ளாண்ட் பொருத்த சுமார் ரூ.7 லட்சம் செலவாகும் என்ற சூழ்நிலையில், இதுவரை 4101 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் பொருத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சமூக நீதித்துறை (ADIP SCHEME) காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சைக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.7 லட்சம் வரை நிதி ஒதுக்குகிறது.

பள்ளிக்கல்வித்துறைக்கான டாக்டர்கள் அடங்கிய குழு கடந்த 8 வருடங்களில் ஆயிரக்கணக்கான காது கேளாத குழந்தைகளை அடையாளம் கண்டு, இந்த சிகிச்சைக்கு அனுப்பி செவிப்புலனை மீட்க உதவியுள்ளது.

உங்களது குழந்தைகளுக்கும் காது சரியாக கேட்காமல் இருப்பதாக தோன்றினால் அருகில் இருக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவை உடனே அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.

நாம் எவ்வளவு சீக்கிரமாக காது கேளாமையை கண்டறிகிறோமோ அந்தளவு செவித்திறனை பெற முடியும்.

காக்ளியர் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் முதல் தாராளமாக செய்யலாம். இருப்பினும் கூடுதலாக 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு இந்த கருவியை பொருத்தும் போது, விரைவாக குழந்தை நன்றாக கேட்டு பேசி படிக்க ஆரம்பிக்கும்.

கற்றலில் எந்த பிரச்சினையும் வராது. இதைத்தவிர, 3 வயதுக்குள்ளாவது இந்த கருவி பொருத்தினால் மட்டுமே நல்ல முடிவுகளை எதிர்பார்க்க முடியும். நமது நாட்டில், மருத்துவ அறிவுரைப்படி, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த கருவி பொருத்தினால் எந்த பலனும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்த கருவியை பொருத்துவதற்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திலும் விண்ணப்பிக்கலாம். இந்த கருவி பொருத்தப்பட்ட பின்னர், பேச்சுப்பயிற்சி, மொழிப்பயிற்சி வழங்க வேண்டும். குழந்தைகளின் கேட்டல் திறன் அதிகரிக்கும் போது தான் கற்றலும், பேச்சும் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் அவர்களுக்கு கேட்டலில் எந்த பிரச்சினையும் வராது.


Next Story