சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்


சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
x

அனிமேஷன் மற்றும் ஆக்‌ஷன் பாணி ஆன்லைன் நிகழ்ச்சிகள் அனைவரும் ரசிப்பார்கள்.

டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே நாடுகளில் வாழ்ந்து தற்போது ஐரோப்பியர்களுடன் கலந்தவர்கள் 'நார்ஸ்மேன்' குடிகள். புஜபல பராக்கிரமசாலிகளான இவர்கள் எதிரிகளை கண்டு அஞ்சா நெஞ்சர்களாக விளங்கியதால் 'வைகிங்' என போற்றப்பட்டனர். வைகிங்களை வைத்து வரலாற்று புனைவுடன் மங்கா கலைஞர் மகோடோ யூகிமுரா உருவாக்கிய 'வின்லாண்டு சாகா' அனிமேஷன் தொடரின் முதல் அத்தியாயம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.

வன்மம், குரோதம், ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு பெயர் பெற்ற இது இளைஞர்களை மட்டுமல்லாது இளசுகளையும் ஆட்டுவித்தது. இளம் தோர்பின் தோர்சன் தந்தையின் சாவுக்கு பழித்தீர்க்க அஸ்க்லாட் என்பவரை தேடி அலைகிறான். இங்கிலாந்து இளவரசர் கானுட் அவரை கொன்றுவிட தோர்பின் இலக்கு மாறுகிறது. இதற்காக கானுட்டை கொல்ல முயற்சிக்கும் தோர்பின் அடிமையாக டென்மார்க்கு கடத்தப்படுகிறான். இவ்வாறாக ரத்தமும் சதையுமாக முடிந்த இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தவம் இருந்தனர்.

நெட்பிளிக்சில் இதன் தொடர்ச்சி தற்போது வெளியாகி வருகிறது. ஆனால் புதிய நாயகனான ஐனாரின் அறிமுகமும், வித்தியாசமான கதைக்களமும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

யுத்தகளத்தில் கொலைகள் புரிந்த சூரர் தோர்பின் மறுபிறவி எடுத்தாற்போல் மன அமைதியை விரும்புகிறான். தன் சுதந்திரத்துக்காக ஐனாருடன் இணைந்து டென்மார்க்கில் விவசாயம் செய்கிறான். மறுமுனையில் இளவரசர் கானுட் தன் அண்ணனை கொன்றுவிட்டு நாடுகளை பிடித்து வருகிறான். இவ்வாறாக நகரும் கதையில் பாத்திரங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல படைப்பாக வின்லாண்டு சாகா மாறும் நிலைக்கு இது அடித்தளமாக விளங்குகிறது.

பீப்

நம்மூரில் மாட்டிறைச்சிக்கு 'பீப்' என பெயர். அமெரிக்கர்கள் ஒருவருடன் ஏற்படும் பிரச்சினையை 'பீப்' என சொலவடையில் கூறுகிறார்கள். கொரியன் டைரக்டர் லீ சூங் ஜின் படைப்பில் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ள இந்த பீப் தொடர் 10 எபிசோடுகளை கொண்டது.

வாழ்க்கையில் நடக்கும் அன்றாட சம்பவங்களை மையமாக தழுவி இதற்கான கதை எழுதப்பட்டுள்ளது. கதைக்களம் டேனி மற்றும் எமியை பற்றியது. டேனி அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்துக்கொண்டு ஒப்பந்ததாரராக இருக்கிறார். தனது பெற்றோரை கொரியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரவழைக்க பணம் சம்பாதிக்கிறார். வளர்ந்து வரும் இளம் தொழில் அதிபர் எமி, தன் நிறுவன பங்குகளின் வணிகத்தை உயர்த்தி பல கோடிகள் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். இருவரும் ஒரு விபத்தில் சந்திக்க மோதலாகிறது. முன்கோபிகளான இவர்கள் மோதிக்கொள்ள பிரச்சினை பூதாகரமாகிறது. ஒருகட்டத்தில் 2 பேரும் தனியாக இருக்க வேண்டிய சூழல். பின்னர் என்ன ஆனது என்பதே இதன் கதை.

குடும்ப சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் கோபத்திற்கு தூண்டுகோலாக உள்ளன. இதனால் கதாபாத்திரங்களில் காண்போரை பொருத்தி பார்க்க வைக்கும். அதுதான் பீப் தொடரின் வெற்றி. டேனி-எமி சந்திக்கும் தனிப்பட்ட போராட்டங்கள் அவர்கள் மீது இரக்கம் மற்றும் பச்சாதாபத்தை வரவழைக்கிறது.

ஸ்டீவன் யூன் டேனியாக தன் அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமி பாத்திரத்துக்கு அலி வோங் உயிர் கொடுத்துள்ளார். கதைக்கு தூண்களாக இவர்களது நடிப்பு இருக்கிறது. பார்வையாளர்களுக்கு இது விருந்து சாப்பிட்ட அனுபவத்தை அளிக்க வல்லது.

ஜூபிலி

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த தொடரின் கதை இந்திய சுதந்திரத்தின்போது தொடங்குகிறது. 1940-50 காலகட்டம் இந்திய சினிமாவின் பொற்காலமாக கருதப்பட்டது. இந்திய சினிமாவின் 'பிதாமகன்' என போற்றப்படும் சத்யஜித்ரே தன் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த காலம் அது.

ராய் டாக்கீஸ் நிறுவன அதிபர் ஸ்ரீகாந்த் ராய் இந்திய சினிமாவின் உச்சத்திற்கு செல்ல துடிக்கிறார். முற்றுரிமை பெற போராடும் அவர் இதற்காக நடிகர் ஜம்சேத் கான் என்பவரை 'சூப்பர் ஸ்டாரா'க மாற்ற முயற்சிக்கிறார். ராய் மனைவி மீது கானுக்கு ஆசை வளர காதலில் முடிகிறது. இதனை அறியும் ராய் ஜம்சேத்தை கொல்ல தன் விசுவாசியான பினோத் தாஸ் என்பவரை அனுப்புகிறார். பினோத்திற்கு திரைத்துறையில் ஸ்டாராக வேண்டும் என்பது ஆசை. 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை விலையாக கேட்க தரப்படுகிறது.

மறுமுனையில் பாகிஸ்தான் இளைஞர் ஜெய் கண்ணா திரைத்துறையில் சாதிக்கும் உத்வேகத்துடன் மும்பைக்கு வருகிறார். ஒரு கட்டத்தில் பினோத்தை கண்ணா சந்திக்க திரைத்துறையில் இவர்கள் ஆக்கிரமிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது. இதனால் ஸ்ரீகாந்த் ராய் மவுசு குறைகிறது. சினிமா என்னும் பேராசை இவர்கள் மூன்று பேருக்குள் பிளவை உண்டாக்க இறுதியில் என்ன ஆனது என்பதே இந்த தொடர்கதையின் சாரம்சம்.

சுதந்திர இந்தியாவில் சினிமாவின் வளர்ச்சி, நட்சத்திரங்களை உருவாக்கிய ஸ்டூடியோக்கள், அகதி மற்றும் பாலியல் தொழிலாளியின் பேராசைகளை இதில் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்திய சினிமாவில் ரஷிய மற்றும் அமெரிக்கர்களின் ஆதிக்கம் ஆகியவை குறித்தும் இதில் தூவப்பட்டுள்ளது.

கதாபாத்திர தேர்வு தொடரின் பலம். சித்தாந்த் குப்தா, அபர்சக்தி குரானா, அதிதிராவ் ஹைதரி, பிரோசன்ஜித் சட்டர்ஜி மற்றும் வாமிகா கபி ஆகியோரின் நடிப்பு பார்வையாளர்களை 'சீட்'டில் இருந்து எழவிடாமல் தடுக்கும்.

அகா

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள பிரெஞ்சு திரைப்படம் 'அகா' அதிரடி ஆக்ஷன் பாணியில் உருவாகி உள்ளது. 'லாஸ்ட் புல்லட்' பட தொடர்களில் ஒன்று. பாரீசில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கிறது. இதற்கு பின்னால் சூடானை சேர்ந்த பயங்கரவாதி முக்தார் அல் யாகீம் இருப்பதை பிரான்ஸ் அரசாங்கம் மோப்பம் பிடிக்கிறது. யாரும் நெருங்க முடியாத அவரிடம் விக்டர் என்பவர் வலது கரமாக செயல்படுகிறார். இவர்கள் கொட்டத்தை கூண்டோடு அழிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்கிறது.

அதற்கான வேலை புலனாய்வு அதிகாரி ஆடம் பிராங்கோவிடம் வருகிறது. முரடன் ஆடம் பிராங்கோ இதற்கு சரியானவர் என கணிக்க விக்டரின் நம்பிக்கையை பெற்று முக்தாரை கொல்ல திட்டம் வகுக்கப்படுகிறது. விக்டர் உள்பட கொடூரர்களின் கூட்டத்திற்குள் நாயகன் ஆடம் பிராங்கோ நுழைகிறார். விக்டரின் நம்பிக்கையை பெற்று முக்தாரை ஆடம் நெருங்கினானா என்பதே இந்த படத்தின் கதை.

பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், அடுத்தடுத்து திருப்பங்கள் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. அல்பன் லீனோர், எரிங் கன்டோனா, ஷிவா அல்வெட்டி உள்பட பல கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகளுடன் திரில்லர்களை விரும்புபவர்கள் காண தவறக்கூடாத படைப்பு அகா படம்.


Next Story