கர்ப்பிணி பெண்களின் தோழி..!


கர்ப்பிணி பெண்களின் தோழி..!
x

திருப்பூர் மாவட்டத்தின் குடிமங்கலம் பகுதியை சேர்ந்தவரான மதுமதி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர். பல காலம் ஐ.டி. துறையில் பணியாற்றியவர், இப்போது இன்ஸ்டாகிராமிலும், ஆன்லைன், ஆப்லைன் வாயிலாகவும், கர்ப்பகால உடல் அசைவுகளையும், கர்ப்பகால மூச்சுப்பயிற்சிகளையும் பெண்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கிறார்.

''அந்த கால பெண்களின் வாழ்க்கை முறைக்கும், இந்த கால பெண்களின் வாழ்க்கை முறைக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர்... போன்ற கருவிகள், நவீன கால பெண்களின் சமையல் வேலைகளை சுலபமாக்கினாலும், மகப்பேறு கால உடல் தயாரிப்பை கடினமாக்கிவிடுகிறது. உடல் அசைவுகள் வெகுவாக குறைந்து விட்டதால், மகப்பேறு காலத்தை சமாளிப்பது சிரமமான ஒன்றாக மாறிவிட்டது. அதனால்தான் இந்த காலத்து பெண்களுக்கு கர்ப்ப கால உடற்பயிற்சிகளும், மனதை ஒருமுகப்படுத்தும் உளவியல் பயிற்சிகளும் தேவைப்படுகிறது'' என்று பேச ஆரம்பிக்கிறார், மதுமதி.

சாப்ட்வேர் என்ஜினீயர் எப்படி கர்ப்பகால உடற்பயிற்சி பயிற்றுனராக மாறினார், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது போன்ற பல கேள்விகளை அவரிடம் முன்வைக்க நிதானமாக பதில் கொடுத்தார்.

''நான் சாப்ட்வேர் என்ஜினீயராகவே பணியாற்றிக் கொண்டிருந்தேன். திருமணத்திற்கு பிறகு, மகப்பேறு காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்தான், என்னை சாப்ட்வேர் என்ஜினீயரில் இருந்து, கர்ப்பகால உடலசைவு ஆசிரியராக மாற்றியிருக்கிறது. ஏனெனில், கர்ப்ப காலத்தின்போது பல்வேறு சிரமங்களை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கர்ப்பம் தரித்த குடும்ப பெண்களுக்கு வீட்டு வேலை செய்வது சிரமம் என்றால், ஐ.டி. துறையில் இருக்கையில் அமர்ந்தபடியே பணியாற்றும் பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள். அவர்களின் கர்ப்பகால உடல் வலியை போக்கவும், குழந்தை பிறப்பிற்கு ஏற்ப உடலை தயார்படுத்தும் நோக்கில்தான், நான் பிரிநாட்டல் மற்றும் போஸ்ட்நாட்டல் பயிற்சிகளை படித்து முடித்தேன். இப்போது இன்ஸ்டாகிராமிலும், ஆன்லைன் வழியாகவும் பெண்களுக்கு இலவசமாக வகுப்பெடுத்து வருகிறேன்'' என்றவர், என்னென்ன பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார்.

''கர்ப்ப காலத்திற்கு ஏற்ப உடலுக்கு மென்மையான அசைவுகள் அவசியம். அப்போதுதான், உடல் பிரசவத்திற்கு ஏற்ப தயாராகும். கால் எலும்புகளும், இடுப்பு எலும்பும் தொடர்புடையவை என்பதால், கால் மற்றும் இடுப்பு பகுதிகளை அதிகமாக அசைத்து, பெல்விக் எலும்பு பகுதிகளை சுகப்பிரசவத்திற்கு ஏற்ப சுலபமாக்கி கொள்ள வேண்டும். மேலும், பிரசவவலியின் போது, மூச்சுப்பயிற்சி மிகவும் அவசியம். வலியை தாங்கிக்கொள்ளவும், உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், மூச்சுப்பயிற்சிகள் பயன்படும். இவ்விரண்டையும், கற்றுக்கொடுப்பதோடு பிரசவத்தின்போது எத்தகைய சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும், வலி எப்படி இருக்கும் போன்றவற்றை விளக்கி, அவர்களை மனதளவிலும் தயார்படுத்துகிறேன். கர்ப்பத்திற்கு முன்பான தயாரிப்புகள் பிரிநாட்டல்கேர் எனவும், குழந்தை பிறப்பிற்கு பிறகான குழந்தை பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு பயிற்சிகளை போஸ்ட்நாட்டல் பயிற்சிகள் எனவும் வகைப்பிரித்து, அவைகளை கற்றுக்கொடுக்கிறேன்'' என்றவர், இந்த பயிற்சிகளின் அவசியம் குறித்து பேசினார்.

''முன்பை போல, இன்று பெண்கள் நன்றாக முதுகை வளைத்து நெளித்து வீட்டை சுத்தம் செய்வதில்லை. பெண்கள், இந்திய கழிவறைகளை அதிகம் பயன்படுத்துவதில்லை. உணவு பழக்கமும் வெகுவாக மாறிவிட்டது. அதனால்தான் பெரும்பாலான பெண்களுக்கு சுக பிரசவம் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஆனால், ஒருசில உடல் அசைவுகளை கற்றுக்கொள்வதனால், உடலை பிரசவத்திற்காக தயார்படுத்த முடியும். உடல் அசைவுகள் மட்டுமின்றி, மூச்சுப் பயிற்சி, உளவியல் ஆலோசனைகள், பிரசவ கால வலியை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் என... எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான், இந்த பிரிநாட்டல் கேர் பயிற்சி. இப்போது மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், இது பரிந்துரைக்கப்படுகிறது'' என்றவர், கடந்த 4 வருடங்களாக, 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு தோழியாக திகழ்ந்து, அவர்களை மகப்பேறு காலத்திற்காக தயார்படுத்தியிருக்கிறார்.

இவர் தூலா எனப்படும் பயிற்சிகளை முடித்திருப்பதால், பிரசவ காலத்தில் மருத்துவர்களின் அனுமதி யுடன் கர்ப்பிணி பெண்களுடன் உடனி ருந்து அவர்களுக்கு உதவி செய்திட முடியும். ஊக்கப்படுத்தவும் முடியும். அந்த பணிகளையும் சிறப்பாக செய்கிறார்.

''பிரசவ வலியின்போது, தங்களின் பயத்தை ஊக்கப்படுத்தாமல், மனதையும்-எண்ண ஓட்டத்தையும் திசைத்திருப்ப சில வழிமுறைகளை தாய்மார்களுக்கு கற்பித்தேன். அப்படி என்னிடம் பயிற்சி பெற்ற பெண் ஒருவர், அவரது பிரசவ வலியின் போது செவிலியரிடம், தோழமையாக பேசி இருக்கிறார். பிரசவ வலி தோன்றி மறையும்போதெல்லாம் மூச்சுப்பயிற்சி செய்து, வலியை கடந்தபின், மீண்டும் செவிலியரிடம் பேசுவது என... 12 மணிநேரத்திற்கும் மேலாக தன் பிரசவ வலியை தைரியமாகவும், உறுதியாகவும், ஸ்மார்ட்டாகவும் கையாண்டு குழந்தையை பத்திரமாக பெற்றெடுத்தார். இதுபோல நிறைய அனுபவங்கள் உண்டு. ஒவ்வொரு பிரசவ அனுபவமும் வேறுபட்டதாக இருக்கும். அந்த அனுபவங்கள், பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், அதை பகிர்ந்து கொள்வேன்'' என்பவர், பிரசவத்திற்கு பிறகும் பெண்களிடம் நட்புறவை தொடருகிறார். மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தவர்களுக்கும், அதிலிருந்து மீண்டுவர சிறுசிறு உடல் அசைவுகளை கற்றுக் கொடுக்கிறார்.

''கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நிறைய பெண்கள், இந்த உடலசைவுகளை கற்றுகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். என்னுடைய உடலசைவு பயிற்சிகள் எந்தளவிற்கு பலனளிக்கிறது, மேலும் மேம்படுத்த வேண்டுமா...? என்பது போன்ற ஒப்பீடுகளை மேற்கொண்டு, உடலசைவுகளை மேலும் அப்டேட் செய்ய இருக்கிறேன். இது பெண்களுக்கு மன தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும்'' என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெற்றார்.


Next Story