நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்


நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்
x

உங்களுக்கு நன்கு தெரிந்த நபரின் பெயர், திடீரென மறந்துபோனது உண்டா..? தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது மிக சுலபமான வார்த்தைகளுக்கு 'ஸ்பெல்லிங்' மறந்துபோய், தவித்தது உண்டா....? மிகவும் பழக்கமான இடத்திற்கு செல்ல வழியை மறந்து நின்றது உண்டா...? இதுபோல திடீர் ஞாபக மறதியை சந்திப்பவராக இருந்தால், நீங்கள் உங்களது நினைவுத்திறனை வளப்படுத்திக் கொள்வது அவசியம். ஆம்...! உடலை உறுதியாக்க உடற்பயிற்சி செய்வது போலவே, மூளையின் நினைவுத்திறனை வலுப்படுத்தவும் சில பயிற்சிகள் உண்டு. அதில் சிலவற்றை தெரிந்து கொள்வோமா..?

எந்த வேலையும் இல்லாமல் தனிமையில் அமர்ந்திருக்கும் போது எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டிருப்பதற்கு மாற்றாக, இசைக்கருவி வாசிக்க கற்றுக் கொள்ளலாம். பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டிகளை முயற்சிக்கலாம்.

தோட்டப் பராமரிப்பு, பறவைகள் வளர்ப்பது, ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றுக்கொள்வது என ஏதேனும் பொழுதுபோக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். நட்பு வட்டங்களை அதிகப்படுத்தி, அவர்களுடனான அரட்டைகளில் உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக... புத்தகம் படிக்கும் பழக்கம் ஒருவரின் மூளையை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளும்போது எப்பொழுதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் நேர்மறையான சிந்தனைகள் பெருகி நினைவாற்றல் வளரும்.

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கேட்பது, அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் அல்லது வார்த்தைகளைக்கூட மறந்து போவது, நன்றாகத் தெரிந்த இடத்துக்குச் செல்லும் வழியை மறப்பது, நம் வீட்டுக்குச் செல்லும் வழியையே மறப்பது மற்றும் இடக் குழப்பம் போன்ற ஒருவரின் நடவடிக்கைகள் உச்சகட்ட மறதியின் அறிகுறிகள். இவை அசாதாரணமானவை.

வயதானவர்கள், பிற நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள், கீழே விழுவதால் தலையில் அடிபடுதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் போன்றவற்றால் அசாதாரண மறதி ஏற்படுகிறது. இது மிக மோசமான ஞாபகமறதி நோய்களுக்கும் அறிகுறியாக இருக்கலாம். அதனால், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.


Next Story