பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் 'பெண்'..!


பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் பெண்..!
x
தினத்தந்தி 14 May 2023 8:15 PM IST (Updated: 14 May 2023 8:16 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவரான இவர், கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கிறார். குடும்ப தலைவியாக தான் எதிர்கொண்ட உடல், மன வேதனைகளுக்கு யோகாசனம் மூலம் தீர்வு கண்டதோடு, அதில் முழுவதுமாக ஐக்கியமாகிவிட்டார்.

''ஆண்களை விட, பெண்கள்தான் அதிக அளவில் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். குடும்பம், வேலை என எப்பொழுதும் பிசியாகவே ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள், பல நேரங்களில் தங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. இதனால் மன நோய் மற்றும் உடல் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், பெண்கள் தங்கள் வயது மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அன்றாட யோகா பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உடல் வலிமையையும், மன அமைதியையும் அடைய முடியும்'' என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், சிந்துஜா.

குறிப்பாக வீட்டு வேலை, அலுவலக மன அழுத்தம், குடும்ப பிரச்சினைகள் இவற்றால் சோர்ந்திருக்கும் பெண்களுக்கு, ஆன்லைன் வழியாக யோகாசன பயிற்சிகளை வழங்கி, அவர்களது வாழ்க்கையை உற்சாகமாக்கி வருகிறார். கடந்த 3 வருடங்களாக, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் நிறைய பெண்களுக்கு இலவச யோகாசன பயிற்சிகளை வழங்கி வரும் சிந்துஜாவிடம், பெண்களுக்கு ஏன் யோகாசனம் அவசியம்?, எந்த வயது வரை பெண்கள் யோகாசனம் செய்யலாம்?, கர்ப்பிணி பெண்கள் யோகா பயிற்சி பெறலாமா? போன்ற பல கேள்விகளை முன்வைக்க, அவர் நிதானமாக பதிலளித்தார். அவை இதோ...

* பெண்களுக்கு யோகா பயிற்சி ஏன் அவசியமாகிறது?

அடுத்த தலைமுறையை ஈன்று வளர்க்கப் போகும் பெண், தன் உடலையும், மனதையும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். பெண்ணின் ஆரோக்கியத்தைப் பொறுத்து, அவளுடைய குடும்பமும், அடுத்த தலைமுறையும் அமையும். இது மட்டும் அல்லாமல், இன்றைய பெண் எல்லா துறைகளிலும் சிறந்து நிற்கிறாள். தன்னுடைய லட்சியங்களை அடைய, முன்னுக்கு வர, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது, மிகவும் முக்கியம். இதற்கு பெண்கள் யோகாசனங்கள் செய்வது அவசியம்.

* எந்த வயது பெண்களுக்கு யோகாசனம் கட்டாயமாகிறது?

பருவமடையும் பெண்கள், திருமண வயது பெண்கள், திருமணம் முடிந்த பெண்கள், நடுத்தர வயதினர், முதுமையடைந்த பெண்கள்... என இவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சிகள் கட்டாயமாகின்றன. பருவமடையும் பெண்களின் மனதில் பலவிதமான குழப்பங்களும், உடல் உறுப்பு சம்பந்தமான சந்தேகங்களும் எழுந்து கொண்டே இருக்கும். அப்படி குழம்பிஇருக்கும் அவர்களது மனதைநிதானப்படுத்த, யோகாசனம் அவசியமாகிறது. மனம் தெளிவானால் அவர்களது ஹார்மோன்களும் சீராக இருக்கும். அதனால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.

ஹார்மோன் சமநிலையும், சீரான ரத்த ஓட்டமும் கருப்பையின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதால், திருமண வயதை நெருங்கும் பெண்களுக்கும், யோகாசனம் கட்டாயமாகிறது. ஏனெனில் யோகாசன பயிற்சிகள், இவ்விரண்டையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

திருமணம் முடிந்து குழந்தை பெற்றவர்கள், கர்ப்ப காலத்திற்கு பிறகான மன அழுத்தத்தை குறைக்கவும், குடும்ப உறவுகளின் உணர்வு நெருக்கடிகளை சமாளிக்கவும் யோகாசனம் பயன்படுகிறது.

வீட்டுவேலை, சமையல் வேலை என பிசியாக இயங்கும் நடுத்தர வயது குடும்ப தலைவிகளுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகளை வலுவூட்டி முதுகுவலி மற்றும் மூட்டு வலிகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

வயதான பெண்கள், தனிமை உணர்வை போக்கவும், தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் யோகாசனம் வழிகாட்டுகிறது.

* நீங்கள், யோகா மூலமாக பெண்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவது ஏன்?

இப்போதெல்லாம் பல இளம் பெண்களுக்கு உடல் சம்பந்தமான நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஒழுங்கற்ற ஹார்மோன், கர்ப்பப்பை கோளாறுகள், மன அழுத்தம், பி.சி.ஓ.எஸ்., பி.சி.ஓ.டி., உடல் பருமன்... இப்படி நிறைய பிரச்சினைகளால் துவண்டுவிடுகிறார்கள். ஒரு பெண்ணாக, எளிமையான யோகாசனம் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆசைப்படுகிறேன். மேலும், மருந்து மாத்திரைகள் மூலமாக உடலை வருத்திக்கொள்வதை விட, யோகாசனம் ஆரோக்கியமான தீர்வாக அமைந்துவிடும்.

* கர்ப்பிணி பெண்கள் யோகா பயிற்சி செய்யலாமா? நீங்கள் கற்றுக்கொடுக்கிறீர்களா?

ஆம்...! கர்ப்பிணி பெண்கள், யோகா பயிற்சி செய்யலாம். இது, சுக பிரசவம் ஆவதற்கு உதவும். முதல் மூன்று மாதங்கள், பயிற்சி எதுவும் தேவை இல்லை; செய்ய வேண்டாம். நான்கு மாதங்களுக்கு பின், அவரவர் உடல் தன்மைக்குத் தகுந்தாற்போல் பயிற்சி செய்யலாம். மிகவும் எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். கடைசி மூன்று மாதங்களில், மூச்சுப் பயிற்சிகளுடன் கருவில் இருக்கும் சிசுவுடன் பேசும் தியானமும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். இது, குழந்தைகளுடனான பிணைப்பையும் அதிகப்படுத்தும். அதேசமயம் கர்ப்பிணிகள் பயம் இல்லாமல், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். பிரசவ நேரத்தில் மூச்சு பயிற்சி மிகவும் உதவும். இது எல்லாவற்றையுமே, ஒரு யோகா சிகிச்சையாளர் மூலம் கற்று, செய்வது தான் நல்லது.

* நடுத்தர வயது பெண்களுக்கு, மாதவிடாய் சிக்கலில் இருந்து விடுபட யோகா உதவுமா?

மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கும் பல பெண்களுக்கு, உடல் மன ரீதியான உபாதைகள் நிறைய இருக்கின்றன. அதிகமான ரத்தப்போக்கு, கை-கால் வலி மட்டும் அல்லாமல் சில பெண்களுக்கு மன அழுத்தம், சட்டென கோபம் கொள்ளுதல் அல்லது மனச்சோர்வு ஆகியவை கூட காணப்படுகின்றன. யோகா பயிற்சி மூலம், உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல; மன அமைதியையும் அடையலாம். இதனால் பல பெண்கள் நன்மை அடைந்திருக்கின்றனர்.

* வயதான பெண்களுக்கும், உடல் உபாதைகள் உள்ள பெண்களுக்கும் யோகா பயிற்சி எவ்வாறு உதவி செய்யும்?

வயதான பெண்களுக்கு மிகவும் எளிமையான ஆசனங்களைத் தான் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குப் பிராணாயாமமும், தியானமும் சேர்த்து பயிற்றுவிக்கலாம். பெண்கள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய், மூட்டு வலி, ஆர்த்தரைட்டிஸ் போன்ற பல உபாதைகளை எதிர்கொள்வதை பார்க்கிறோம். இதுபோல் பல உபாதைகளை யோகா பயிற்சியினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். தினமும் பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். பல பெண்கள், 'எனக்கு தினமும் இவ்வளவு நேரம் ஒதுக்குவது கஷ்டம்' என்று நினைப்பது உண்டு. இதுபோல் நினைக்காமல், 'இது என் நேரம். என் ஆரோக்கியத்திற்கான முதலீடு யோகா பயிற்சி' என்ற உணர்வுடன், தன்னம்பிக்கையுடன் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.

* சிறுவயதில் இருந்து உடற்பயிற்சி எதுவும் செய்ததில்லை என்று கூறும் முதியவர்கள் புதிதாக யோகா பயிற்சி ஆரம்பிக்கலாமா?

யோகா பயிற்சியை எந்த வயதில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவரவர் உடல் தன்மைக்கு உகந்தது போல, மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், ஆசனம், சவாசனம், நடைப் பயிற்சி... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

* யோகா கலையை பொறுத்தவரையில், எதை தவிர்க்கவேண்டும்?

தன்னிச்சையாக யோகா பயில்வதையும், ரீல்ஸ், யூ-டியூப் வீடியோக்களை பார்த்து யோகா செய்வதையும் தவிர்க்க வேண்டும். அதேசமயம், ஆரம்பத்திலேயே கடினமான ஆசனங்களை செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

* உங்களுடைய ஆசை என்ன?

இப்போது ஆன்லைன் வாயிலாக பெண்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கிறேன். எதிர்காலத்தில், பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசன பயிற்சி பெறும் வகையில், பெண்களுக்கான ஸ்டூடியோ ஒன்றை உருவாக்குவதுதான், என்னுடைய ஆசை. அது முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆரோக்கிய மையமாக இருக்கும்.


Next Story