பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மரப்பொருட்களில் மாற்றத்தை உண்டாக்குபவர்..!
தஞ்சையை சேர்ந்த அபிராமி முயற்சி, பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிலைப்படுத்து வதுடன், கைவினை மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.
தஞ்சையை சேர்ந்த அபிராமி, வித்தியாசமானவர். கைவினை கலைஞர்கள், மறுசுழற்சி பொருள் வடிவமைப்பவர்கள், மூலிகை உற்பத்தியாளர்கள்... இவர்களுக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக களமிறக்கப்படும் மரப்பொருட்களும், மறுசுழற்சி பொருட்களுமே அதிகமாக நிறைந்திருக்கிறது. கூடவே ரசாயன பொருட்களுக்கு எதிரான மூலிகை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகள் நிறைந்திருக்கின்றன.
பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. முடித்திருக்கும் அபிராமி, சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான முறையில் கையாண்டு, நல்ல விஷயங்களை டீன் ஏஜ் வயதினர் மத்தியில் பரப்பி வருகிறார்.
''நாம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு எதை பயன்படுத்தலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், தாய்லாந்து, இந்தோனேஷியா, நெதர்லாந்து... போன்ற நாடுகளில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, இயற்கை பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக மூங்கில் பாட்டில்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஏன்...? திரவ பொருட்களை வாழை இலைகளில் மடித்து கொடுக்கிறார்கள்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஐஸ்கிரீம், சூப் வகைகளை கொட்டாங்குச்சி ஓடுகளில் பரிமாறி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நாம் மட்டுமே இன்னும் ஏன் பிளாஸ்டிக் பொருட்களையே உபயோகிக்க வேண்டும்? என்ற கேள்வி வெகுநாட்களாகவே, எனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, இயற்கை பொருட்களை தேட ஆரம்பித்தேன். அந்த தேடல், இன்று என்னை பல தளங்களில் பயணிக்க வைக்கிறது'' என்றவர், சமூக வலைத்தளங்களில் 'ஆக்டிவ்' ஆக செயல்படுகிறார். குறிப்பாக பிளாஸ்டிக் எதிர்ப்பு சம்பந்தமான பதிவுகள் இவரது சமூக வலைத்தள பக்கங்களில் அதிகமாக இடம்பெறுகிறது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் இளம் வயதினர், அதற்கான மாற்று இயற்கை பொருட்களை கேட்க, அபிராமி கைவினை கலைஞர்கள் மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களை அணுகி இருக்கிறார். அவர்களும், தங்களால் முடிந்த பொருட்களை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர்.
''தென்னமர கொட்டாங்குச்சியில் மரக் குவளை, மர ஸ்பூன், மூங்கில் குடுவைகளில் உருவான பாட்டில், வேப்பமர சீப்பு, வாழைநார் இழை மற்றும் பீர்க்கங்காய் நார் இழைகளில் உருவாகும் உபயோகப் பொருட்கள், மூங்கில் குச்சி பொருட்கள், சுரைக்காய் குடுவைகளில் உருவாகும் மற்ற மாற்று பொருட்கள் என... நிறைய பொருட்களை கைவினை கலைஞர்கள் மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களை கொண்டு உருவாக்கினோம். இதுதவிர மூங்கில் பாட்டில்... போன்றவை ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றன.
இவை தரத்தில் உயர்வானவை. விலை மதிப்பில் நடுநிலையானவை. அப்படி இருந்தும், நம் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்க தயங்குகிறார்கள்'' என்றவர், பிளாஸ்டிக் ஒழிப்பு மூலமாக இதுபோன்ற இயற்கை பொருள் உற்பத்தியையும் ஊக்கப்படுத்த முடியும். கூடவே, கைவினை கலைஞர்களையும் உருவாக்க முடியும் என்கிறார்.
''பிளாஸ்டிக் மாற்று பொருட்களை தேடிய பயணத்தில் நிறைய கைவினை கலைஞர்களையும், மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் மிக குறைந்த விலையிலேயே பொருட்களை தயாரிக்கிறார்கள். ஆனால் வர்த்தகம் என்ற பெயரில், மர பொருட்கள் பலரது கைகளுக்கு கைமாறி மக்களை சென்றடைவதால்தான், மறுசுழற்சி மாற்று பொருட்களின் விலை அதிகமாக இருப்பதுபோல தோன்றுகிறது'' என்றவர், இதற்கு தன்னுடைய சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தீர்வு கண்டிருக்கிறார். கைவினை கலைஞர்களின் புதுப்புது படைப்புகள் இவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு வாங்கும் வகையில் இன்ஸ்டா பக்க கணக்கை பராமரிக்கிறார்.
இவரது முயற்சி, பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிலைப்படுத்து வதுடன், கைவினை மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.
''உணவு தொடங்கி உடை வரை எல்லாவற்றிலும் மக்கள் ஆர்கானிக் பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் வாங்கி உண்ணும் ஆர்கானிக் உணவின் உண்மைத்தன்மை பற்றியும், ஆர்கானிக் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கும் உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உண்மைத்தன்மையைபற்றியும் யாரும் யோசிப்பதில்லை.
வெறும் கவர்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை வைத்தே, அவை 'ஆர்கானிக்' என்பதை உறுதி செய்து விடுகிறார்கள்'' என்றவர், மூலிகை பொருட்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய குடும்பங்களை ஒருங்கிணைத்து, சுத்தமான ஆர்கானிக் பொருட்களை கண்டறிய முயற்சி செய்கிறார். குறிப்பாக, தன்னுடைய வீட்டிலேயே முயன்று பார்க்கிறார்.
''ஆர்கானிக் பொருட்களில், 100 சதவிகிதம், 75 சதவிகிதம், 50 சதவிகிதம், 30 சதவிகிதம் என அளவீடுகள் உண்டு. ஆனால் நாம் இதை பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பதில்லை. அதேசமயம், சிறந்த ஆர்கானிக் மூலிகை பொருட்களை எப்படி சோதித்து பார்ப்பது, எப்படி பார்த்து வாங்குவது என்பதும் தெரியவில்லை. இந்த அசவுகரியங்களை போக்கவே, சில இயற்கை பொருட்களை நானே தயாரித்து கொடுக்கிறேன். மூலிகை குளியல் பொடி தொடங்கி, அழகு சாதனப்பொருட்கள் வரை 100 சதவிகிதம் ஆரோக்கியமானதை ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் இன்றி தயாரிக்க வழிகாட்டுகிேறன்.
அதுபற்றிய விளக்கங்களும், வழிகாட்டுதல்களும், மாதிரி பொருட்களும் என்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் நிறைந்திருக்கின்றன'' என்றவர், நமக்கு ரொம்ப பரீட்சயமான, நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் மூலிகை பொருட்களை அடுத்த நாட்டவர்கள் பேட்டன் பதிவு செய்வதற்கு முன்பாக, அவை நமக்கு சொந்தம் என்பதை நாம்தான் பதிவு செய்ய வேண்டும். அதுதான், நமக்கு பாதுகாப்பும் கூட என்ற கருத்துடன் விடைபெற்றார்.