சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்


சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
x

image courtesy: PTI

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது.

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் சக நாட்டு வீரரும், முன்னாள் சாம்பியனுமான எச்.எஸ்.பிரனாயை சந்திக்கிறார்.

மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், டென்மார்க்கின் ராஸ்முஸ் ஜெம்கியை எதிர்கொள்கிறார். இன்னொரு இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், சுவிட்சர்லாந்தின் டாபியாஸ் குன்ஜியை சந்திக்கிறார். காஷ்யப் தகுதி சுற்று மூலம் முன்னேறும் வீரருடன் மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் சாம்பியனுமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சக நாட்டு வீராங்கனை மாள்விகா பான்சோத்துடன் தனது மோதலை தொடங்குகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் தகுதி சுற்று மூலம் ஏற்றம் காணும் வீராங்கனையை சந்திக்கிறார். இன்னொரு இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா, டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க்குடன் களம் காணுகிறார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த், பிரியா-ஸ்ருதி மிஸ்ரா, ஆரத்தி சாரா-வர்ஷினி உள்ளிட்ட ஜோடியினர் ஆடுகிறார்கள். இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2¼ கோடி ஆகும்.


Next Story