புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி


புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி
x

image courtesy: ProKabaddi twitter

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தாஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி பெற்றன.

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி, தபாங் டெல்லியை எதிர்கொண்டது. கடும்போட்டி நிலவிய முதல் பாதியில் உ.பி. அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் (12-11) முன்னிலையில் இருந்தது. பிற்பாதியில் எதிரணியை ஆல்-அவுட் செய்து அசத்திய உ.பி.யோத்தாஸ் அணி இறுதியில் 28-23 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் புனேரி பால்டன் 40-25 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), உ.பி.யோத்தாஸ் - பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story