கிளாசிக்கல் செஸ்: முதல் முறையாக நம்பர்-1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
கார்ல்சனுக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதன்மூலம், 5.5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறை ஆகும். இதற்கு முன்னர் கிளாசிக்கல் பிரிவில் இருவரும் மூன்று முறை விளையாடி உள்ளனர். அந்த மூன்று ஆட்டமும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
நார்வே செஸ் தொடரில் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), முன்னாள் சாம்பியன் கார்ல்சன் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும்.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில், டிங் லிரெனிடம் தோல்வி கண்டார். இன்று நடந்த மூன்றாவது சுற்றில் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் வெள்ளை நிறை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா, அபாரமாக செயல்பட்டு கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.
மிக மெதுமான செஸ் என அறியப்படும் கிளாசிக்கல் செஸ் ஆட்டத்தில் காய்களை நகர்த்த வீரர்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். இந்த வகை ஆட்டத்தில் ஒரு மணி நேரம் வரை கூட காய்களை நகர்த்த வீரர்கள் நேரம் எடுத்துக் கொள்ள முடியும்.
இதே தொடரின் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.