கேல் ரத்னா விருது 2024: பரிந்துரை பட்டியலில் இடம்பெறாத சரித்திர சாதனை படைத்த மனு பாக்கரின் பெயர்
ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை மனு பாக்கர் படைத்தார்.
புதுடெல்லி,
விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து வருகின்றன. மத்திய அரசு வழங்கும் விருதுகளில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும் ஒன்று.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோர் அடங்குவர்.
மேலும் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்பேன் டெஸ்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் இந்த பட்டியலில் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்கள் வென்று சரித்திர சாதனை படைத்த மனு பாக்கரின் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனு பாக்கர் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. இது தற்போது பலரது மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.