சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்குகிறது.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று முதல் 11-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம் ஆகும்.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனின் உள்பட 8 வீரர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தின் கார்த்திகேயன் முரளி, பிரணவ், பிரனேஷ், ஆர்.வைஷாலி மற்றும் ஹரிகா உள்பட 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்களும் களம் காணுகிறார்கள்.
7 சுற்று கொண்ட இந்த போட்டி (கிளாசிக்கல்) ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும். உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அர்ஜூன் எரிகைசி தனது முதல் சுற்றில் விதித் குஜராத்தியுடன் மோதுகிறார். வைஷாலி, லியோன் மென்டோன்காவை சந்திக்கிறார்.
இந்த போட்டியை நேரடியாக காண குறிப்பிட்ட அளவிலான இருக்கைகள் பதிவு செய்யப்பட்ட செஸ் அகாடமி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பார்வையிட நாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு, அனுமதி டிக்கெட்டை 'புக்மைஷோ' இணையதளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.