வினேஷ் போகத் விவகாரம்: மத்திய மந்திரி மாண்டவியா மக்களவையில் விளக்கம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


வினேஷ் போகத் விவகாரம்:  மத்திய மந்திரி மாண்டவியா மக்களவையில் விளக்கம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x

வினேஷ் போகத் விவகாரத்தில் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பிடம், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது என காரணம் கூறப்பட்டு, போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி மக்களவையில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மக்களவையில் மத்திய விளையாட்டு துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அளித்துள்ள விளக்கத்தில், போகத்துக்கு தனியாக பணியாளர் வசதி உள்ளிட்ட தேவையான சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவையில் மந்திரி மன்சுக் மாண்டவியா பேசும்போது, 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

50 கிலோ எடை பிரிவில் வினேஷ் விளையாடினார். அவருடைய எடை 50 கிலோ இருந்திருக்க வேண்டும். ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பின் விதிமுறைகளின்படி, அனைத்து போட்டிகளுக்கும், ஒவ்வொரு நாள் காலையிலும், அந்தந்த பிரிவில் எடை சரிபார்த்தல் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

இதன்படி, பாரீஸ் நேரப்படி இன்று காலை 7.15 மணி முதல் 7.30 மணிக்குள் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டிக்கான எடை நிர்ணயம் சரி பார்க்கப்பட்டது. இதில், வினேஷின் எடை 50 கிலோ மற்றும் 100 கிராம் இருந்தது. அதனால், போட்டிக்கு அவர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டு விட்டார் என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பிடம், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடியும், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷாவிடம், இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.


Next Story