பாரீஸ் ஒலிம்பிக்: நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணி


பாரீஸ் ஒலிம்பிக்: நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணி
x

Image Courtesy: AFP 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணி தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே (8வது நிமிடம்) நியூசிலாந்தின் லேன் சேம் கோல் அடித்து அசத்தினார். இதனால் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் மந்தீப் சிங் (24வது நிமிடம்), விவேக் சாகர் பிரசாத் (34வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. இதன்பின் ஆட்டத்தில் கடைசி 8 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் நியூசிலாந்து அணி திடீரென ஒரு கோலை அடித்து அதிர்ச்சி அளித்தது. இதனால் ஆட்டம் 2-2 என்று சமநிலைக்கு சென்றது. இதையடுத்து டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை அபாரமாக பயன்படுத்தி கொண்ட ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி ஒலிம்பிக் தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளை பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.


Next Story