என்னை யாரும் வெளியேற்றவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பராகுவே நீச்சல் வீராங்கனை


என்னை யாரும் வெளியேற்றவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பராகுவே நீச்சல் வீராங்கனை
x

image courtesy: AFP

தினத்தந்தி 8 Aug 2024 8:55 PM IST (Updated: 8 Aug 2024 9:08 PM IST)
t-max-icont-min-icon

பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையை அந்த நாட்டு ஒலிம்பிக் அணி நிர்வாகிகளே தாயகம் அனுப்பவுள்ளனர்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

இதில் பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலான்சோ. 20 வயதாகும் இவர், ஒலிம்பிக் தொடரின் நீச்சல் பிரிவில் 100 மீ பட்டர்பிளை போட்டியில் பங்கேற்றார். அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை 0.24 நொடிகளில் தவறவிட்டுள்ளார். இதன் மூலம் லுவானா அலான்சோவின் ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வந்தது.

விளையாட்டு வீரர்கள் போட்டிகள் முடிவடைந்தாலும், ஒலிம்பிக் கிராமத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக லுவானா ஒலிம்பிக் கிராமத்திலேயே தங்கி சக போட்டியாளர்களின் போட்டிகளை கண்டு ரசித்து வந்துள்ளார்.

அப்படி சக நாட்டு வீரர்களுடன் தங்கியிருந்த லுவானா அலோன்சோ, தன்னுடைய அதிகப்படியான அழகால் மற்றவீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறார் என்று சொந்த நாட்டினாலேயே நாட்டிற்கு திரும்பும்படி லுவானா கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியது.

லூவானா அலான்சோவின் அழகு சக வீரர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

உண்மையில் அதிகப்படியான அழகுடன் இருந்ததுதான் காரணமா என்ற கேள்வி எழும் நிலையில், "அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவதை விடுத்து, தனது சொந்த விருப்பங்களுக்காக யாருக்கும் தெரியாமல் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறி வெளியில் சுற்றினார்" அதனாலயே அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்த லுவானா, "நான் ஒலிம்பிக் குழுவில் இருந்து அகற்றப்படவோ வெளியேற்றப்படவோ இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். நான் இதுகுறித்து எந்த அறிக்கையையும் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் பொய்கள் என்னை பாதிக்க விடமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் இதனால் கோபமடைந்த லுவானா அலான்சோ, "நான் அதிகாரபூர்வமாக நீச்சல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.


Next Story