நாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை மறந்துவிட வேண்டாம் - நீரஜ் சோப்ரா
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
பாரீஸ்,
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்துகொண்டார். தனது அபார திறமையால் அடுத்தடுத்து வெற்றிபெற்ற அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். தங்கப்பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது அவருக்கு பேரிடியாக அமைந்த நிலையில், இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு தற்போது அனைத்து தரப்பினரும் ஆதரவும், புகழாரமும் சூட்டி வருகின்றனர். இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் திடீரென அறிவித்தார்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். இந்த நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது.
அதன்படி வினேஷ் போகத் வழக்கில் பாரீஸ் நேரப்படி நாளை மாலை 6 மணிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வினேஷ் போகத் பதக்கம் வென்றாலும், வெல்லாவிட்டாலும் நாட்டுக்காக அவர் செய்ததை மறந்துவிட வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அவர் பதக்கம் பெற்றால் நன்றாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவருக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கம் கிடைக்கவில்லை என்றால், மக்கள் நம்மை சில காலம் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் நாங்கள் பதக்கம் பெறவில்லை என்றால் அவர்களும் நம்மை மறந்து விடுவார்கள். எனவே, வினேஷ் போகத் பதக்கம் வென்றாலும், வெல்லாவிட்டாலும் நாட்டுக்காக அவர் செய்ததை மறந்துவிட வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.