தேசிய சீனியர் ஆக்கி போட்டி: தமிழ்நாடு அணி வெற்றி
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.
சென்னை,
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில், 14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.
16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், போட்டியை நடத்தும் தமிழ்நாடு, டெல்லி, கேரளா உள்பட 31 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆந்திராவை சந்தித்தது. ஆரம்பம் முதலே அட்டகாசமாக ஆடிய தமிழக வீரர்கள் 7-0 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை பந்தாடினர். தமிழக அணியில் கேப்டன் கார்த்தி (16-வது, 57-வது நிமிடம்) 2 கோலும், செல்வராஜ் (21-வது நிமிடம்), திலீபன் (38-வது நிமிடம்), ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி (40-வது நிமிடம்), மனோஜ் குமார் (41-வது நிமிடம்), மாரீஸ்வரன் (49-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.