தமிழ்நாட்டில் 'மான்செஸ்டர் யுனைடெட்' பயிற்சி மையம் திறக்க வாய்ப்பு

Image Courtesy : AFP
தமிழ்நாட்டில் ‘மான்செஸ்டர் யுனைடெட்’ பயிற்சி மையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராபோர்ட் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப், இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுகிறது. உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பிற்கு, இந்தியாவில் மட்டும் சுமார் 3.5 கோடி ரசிகர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'மான்செஸ்டர் யுனைடெட்' கால்பந்து கிளப், முதல் முறையாக இந்தியாவில் தனது பயிற்சி மையத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்த பயிற்சி மையம் அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டுக் கூட்டத்தில், சென்னையில் கால்பந்து பயிற்சி மையம் அமைப்பது குறித்து மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் உயர் அதிகாரிகள் குழுவினரோடு தமிழ்நாடு தொழில்துறை அதிகாரிகள் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் கால்பந்து பயிற்சி மையத்தை, குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கால்பந்து பயிற்சி மையத்தை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.