இளம் வீரர்களான ரோகித் மற்றும் விராட் 2028 வரை விளையாடுவார்கள் - பிரதமர் மோடி


இளம் வீரர்களான ரோகித் மற்றும் விராட் 2028 வரை விளையாடுவார்கள் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 6 July 2024 10:57 AM GMT (Updated: 6 July 2024 11:01 AM GMT)

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.

வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரிடம் 2028 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி தங்கப்பதக்கம் வெல்வதே இந்தியாவின் மிகப்பெரிய பெருமை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "மோடிஜி ஒலிம்பிக் தொடரில் விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. அது நம் வீரர்களுக்கும் நாட்டுக்கும் வாரியத்திற்கும் மிகப்பெரியது. அத்தொடரில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டது பெருமையான தருணம்" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட மோடி பேசியது பின்வருமாறு. "ரோகித் மற்றும் விராட் கோலி போன்ற இளம் வீரர்கள் 2028 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக விளையாடுவார்கள்" கூறினார்.


Next Story