மக்களின் கேள்விகளை உங்களால் நிறுத்த முடியாது- ரோகித் சர்மாவுக்கு அஸ்வின் ஆதரவு


மக்களின் கேள்விகளை உங்களால் நிறுத்த முடியாது- ரோகித் சர்மாவுக்கு அஸ்வின் ஆதரவு
x

image courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் பார்மின்றி தவித்து தோல்விக்கு காரணமாய் அமைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முதல் போட்டியில் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இதனால் அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் விமர்சகர்களின் வாயை எப்போதும் மூட முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அப்படி மூட வேண்டுமெனில் இந்த தொடரிலேயே ரோகித் சர்மா சதமடித்து காண்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே அவர் சிறப்பாக விளையாடி இந்த தொடரில் சதத்தை அடிக்க நான் வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது எளிதல்ல. ரோகித் சர்மாவின் பார்வையில் இது அவருக்கு கோபத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் அவர் இந்த தொடரில் கவனத்தை செலுத்த விரும்புகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியுள்ள நான் அதில் தொடர விரும்புகிறேன் என்பதே ரோகித் சர்மாவின் கருத்தாகும். எனக்கு மிகவும் பிடித்த ஒருநாள் தொடரில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடப் போகிறேன் என்று அவர் சொன்னார். ஆனால் மக்கள் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பார்கள்.

போட்டியைப் பார்க்கும் மக்கள் கண்டிப்பாக கேள்வி எழுப்புவார்கள். அதை உங்களால் நிறுத்த முடியாது. ரோகித் அசத்தும்போது மட்டுமே அவர்கள் கேள்விகளை நிறுத்துவார்கள். ஆனால் ஒரு வீரராக ரோகித் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அது எளிதல்ல. எனவே அவர் சிறப்பாக விளையாடி இந்த தொடரில் சதத்தை அடிக்க நான் வேண்டிக் கொள்கிறேன்" என்று கூறினார்.


Next Story