மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இங்கிலாந்து அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்கா 135 ரன்களில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக சோலி ட்ரையான் 45 ரன்கள் எடுத்தார்.
டர்பன்,
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 5 ரன்னிலும், அடுத்து வந்த சுனே லூஸ் 4 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து லாரா வோல்வார்ட் உடன் அன்னரி டெர்க்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் லாரா வோல்வார்ட் 35 ரன்னிலும், அன்னரி டெர்க்சன் 29 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள், இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் மரிசான் கேப், நாடின் டி கிளர்க், சினாலோ ஜாப்டா ஆகியோர் ரன் எடுக்காமலும், நோன்குலுலேகோ ம்லபா 4 ரன்னிலும், அயன்டா ஹ்லுபி 6 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 135 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சார்லோட் டீன் 4 விக்கெட்டும், சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.