மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை எளிதில் வென்றது இந்தியா


மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை எளிதில் வென்றது இந்தியா
x

Image Courtesy: @ACCMedia1

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

கோலாலம்பூர்,

முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

அதன்படி இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் நேற்று நடந்த சூப்பர்4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட்டும், சோனம் யாதவ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த கமலினி ரன் எதுவும் எடுக்காமலும், அடுத்து வந்த சனிகா சால்கி ஒரு ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். இதைத்தொடர்ந்து கேப்டன் நிக்கி பிரசாத், தொடக்க வீராங்கனை திரிஷாவுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி இலக்கை எளிதில் எட்ட வைத்தனர்.

இறுதியில் இந்திய அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திரிஷா 58 ரன்களுடனும் (46 பந்து, 10 பவுண்டரி), நிக்கி பிரசாத் 22 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.


Next Story