மகளிர் ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி தாய்லாந்து அசத்தல் வெற்றி
தாய்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஒன்னிச்சா கம்சோம்பு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தம்புல்லா,
9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் பி பிரிவு ஆட்டத்தில் தாய்லாந்து - மலேசியா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தாய்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக நன்னபட் கொஞ்சரோஎங்கை 40 ரன்கள் அடித்தார். மலேசியா தரப்பில் அதிகபட்சமாக மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மலேசியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன வான் ஜூலியா தனி ஆளாக போராடினார். அவருக்கு மற்ற வீராங்கனைகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மலேசியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களை தவிர மற்ற வீராங்கனைகள் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
20 ஓவர்களில் மலேசியா அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மலேசியா தரப்பில் அதிகபட்சமாக வான் ஜூலியா 52 ரன்கள் அடித்தார். தாய்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஒன்னிச்சா கம்சோம்பு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.