இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்றம் கண்ட நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
துபாய்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் முதல் 3 தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) அணிகள் தொடர்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து இலங்கை (45.45 சதவீதம்) 5ம் இடத்திலும், இங்கிலாந்து (43.18 சதவீதம்) 6ம் இடத்திலும் உள்ளன. தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான் (33.33 சதவீதம்), வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) அணிகள் உள்ளன.