ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ரோகித் சர்மா ஓய்வா...?


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ரோகித் சர்மா ஓய்வா...?
x
தினத்தந்தி 28 Dec 2024 12:58 AM IST (Updated: 28 Dec 2024 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ரோகித் சர்மா 12 பந்துகளில் 3 ரன்களை எடுத்து வெளியேறினார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 2 போட்டிகளில் அந்த அணிகள் விளையாடி இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் களம் இறங்கினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதனால், அவர் ஆடிய கடைசி 4 இன்னிங்ஸ்களில் 22 ரன்களையே எடுத்துள்ளார். இது டெஸ்ட் போட்டிகளில் அவருடைய எதிர்காலம் பற்றிய பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. நடந்து வரும் தொடருடன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெறலாம் என்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது. அணியின் தலைமை தேர்ந்தெடுப்பாளரான அஜித் அகார்கர் ஆஸ்திரேலியாவில் உள்ளார்.

இதனால், 37 வயதுடைய ரோகித் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற இந்தியா தவறினால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெறுவார் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.

ரோகித்தின் வயதும், சொற்ப ரன்களில் அவர் ஆட்டமிழப்பதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் முடிவு அவருக்கு கைகொடுக்கவில்லை. 12 பந்துகளில் 3 ரன்களையே சேர்க்க முடிந்த ரோகித், பேட் கம்மின்ஸிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். வழக்கம்போல் விளையாட கூடிய ஷாட்களையே ரோகித் அடித்து விளையாடினார். ஆனால், கம்மின்சுக்கு எதிராக சமீப காலங்களாக அவர் போராடுகிறார் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.


Next Story