இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? - விளக்கம் அளித்த ரோகித் சர்மா


இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? - விளக்கம் அளித்த ரோகித் சர்மா
x

image courtesy; AFP

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், 3-வது போட்டி முடிவடைந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் அமைந்தது.

இந்நிலையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் எஞ்சியுள்ள 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு மாற்று வீரராக தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 2 அனுபவமிக்க ஸ்பின்னர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அஸ்வினுக்கு பதிலாக தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாததாக அமைந்தது.

இந்நிலையில் இது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தனுஷ் ஒரு மாதத்திற்கு முன்பாக இங்கே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். குல்தீப் யாதவிடம் விசா இல்லை. அதனால் முடிந்தளவுக்கு வேகமாக வந்து இந்திய அணியுடன் இணையும் ஒருவர் எங்களுக்கு தேவைப்படுகிறார்.

தனுஷ் பயிற்சி போட்டியில் இங்கே நன்றாக விளையாடினார். நகைச்சுவைகளை தாண்டி அவர் கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். மேலும் சிட்னி அல்லது மெல்போர்னில் 2 ஸ்பின்னர்கள் விளையாட வேண்டிய சூழ்நிலை வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க விரும்புகிறோம். குல்தீப் யாதவ் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் 100 சதவீதம் தயாராக இல்லை.

அக்சர் படேலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. எனவே அவரால் வெளியே பயணிக்க முடியாது. அதனால் தனுஷை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். சொல்லப்போனால் கடந்த ரஞ்சிக் கோப்பையை மும்பை வெல்வதற்கு அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story