சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எப்போது..? அஸ்வின் பதில்


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எப்போது..? அஸ்வின் பதில்
x
தினத்தந்தி 15 Sep 2024 9:02 AM GMT (Updated: 15 Sep 2024 11:05 AM GMT)

தனது ஓய்வு குறித்து சில கருத்துகளை அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

இந்திய அணியின் அனுபவ வீரரும் தமிழகத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரருமான 37 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி உள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அதனால் அவரை இந்த தலைமுறையின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் தற்போது 37 வயதான அஸ்வின் தனது கெரியரின் இறுதி கட்டத்தில் உள்ளார் என்று பார்க்கப்படுகிறது.

விரைவில் அவர் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார் என்று பலரும் பேசி வரும் வேளையில் தனது ஓய்வு குறித்தும், அனில் கும்ளேவின் சாதனையை முறியடிப்பது குறித்தும் அஸ்வின் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஓய்வு குறித்து தற்போதைக்கு என் மனதில் எந்த நினைப்பும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன். எதிர்காலத்தை கணக்கில் கொண்டது கிடையாது. வயதாகும்போது கூடுதல் முயற்சியும் பயிற்சியும் தேவை. அந்த வகையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகமான முயற்சிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன்.

அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஏனெனில் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். நான் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். நான் அவரை மிஞ்ச வேண்டும் என்ற எந்த இலக்கையும் வைத்துக் கொண்டதில்லை. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அதுவரை செல்வேன்" என்று கூறினார்.


Next Story