பாண்டிங்கிற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? - கம்பீர் விளாசல்


பாண்டிங்கிற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? - கம்பீர் விளாசல்
x
தினத்தந்தி 11 Nov 2024 10:58 PM IST (Updated: 12 Nov 2024 2:25 PM IST)
t-max-icont-min-icon

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.

முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வருகிறார். அதனால் கடந்த 5 வருடங்களில் விராட் கோலி 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பாண்டிங்கிற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலிய அணியை பற்றி சிந்திக்க வேண்டும். எனக்கு எந்த கவலையும் இல்லை. விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் கடினமான மனிதர்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய சாதித்துள்ளார்கள். எதிர்காலத்திலும் நிறைய சாதிக்கப் போகிறார்கள். இப்போதும் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என்பது முக்கியம். இப்போதும் ஆர்வத்துடன் இருக்கும் அவர்கள் நிறைய சாதிக்க விரும்புகிறார்கள் என்பதே என்னை பொறுத்த வரை முக்கியம்.

குறிப்பாக கடந்த தொடரில் சந்தித்த தோல்வியால் இந்திய அணியில் தற்போது வெற்றிக்கான பசி அதிகமாக இருக்கிறது. இந்திய அணி தற்போது வருங்காலத்தை நோக்கி மாற்றங்கள் செய்யும் சூழ்நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு 5 போட்டிகளில் விளையாட செல்கிறோம் என்பது மட்டுமே எனது மனதில் இருக்கிறது. எங்கள் அணியில் அற்புதமான சாதனைகளை நிகழ்த்திய வீரர்கள் உள்ளார்கள். எனவே மாற்றங்கள் பற்றி நீங்கள் பேசிக் கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்த வரை எங்கள் அணி வீரர்களிடம் இன்னும் நெருப்பு இருப்பதாகவே கருதுகிறேன். மாற்றங்கள் என்பது இந்திய கிரிக்கெட்டில் நடந்து கொண்டே இருக்கும். தற்சமயத்தில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெல்வதை பற்றி மட்டுமே யோசிக்கிறோம்" என்று கூறினார்.


Next Story