நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தோல்வி குறித்து தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியது என்ன..?


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தோல்வி குறித்து தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியது என்ன..?
x

image courtesy: AFP

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணி கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 போட்டிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சமன் செய்யும் நோக்கத்தில் விளையாடுவதில்லை என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். அதனாலேயே முதல் போட்டியில் டிராவுக்காக விளையாடாமல் இந்தியா வெற்றிக்கு விளையாடியதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.:- "டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரா என்பது சலிப்பை ஏற்படுத்தக்கூடியது. டி20 போட்டிகள் அதிகமாக நடைபெறும் இந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டிராவை நம்மால் பார்க்க முடியாது. நாம் கான்பூரில் மகிழ்ச்சியுடன் நாட்களை எதிர்கொண்டிருந்தால் பெங்களூருவில் நடந்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முதல் போட்டியில் கடைசி இரண்டரை நாட்களில் பேட்டிங் செய்து டிரா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நாங்கள் காட்டவில்லை.

சுப்மன் கில் கடந்த போட்டியில் காயத்தால் விளையாடவில்லை. அவர் நல்ல நிலையில் இருக்கிறார். இருப்பினும் அவரை விளையாடும் 11 பேர் அணியில் சேர்ப்பது பற்றி நாங்கள் முடிவு எடுக்கவில்லை. நாளை அணியின் நலனுக்காக தேவையான முடிவை எடுப்போம். நமது அணி வெற்றிக்காக விளையாட செல்லும். ரிஷப் பண்ட் தற்போது நன்றாக இருக்கிறார். அதனால் அவர் நாளை விக்கெட் கீப்பிங் செய்வார். பிட்னெஸ் பற்றி எந்த கவலையும் இல்லை" என்று கூறினார்.


Next Story