இவ்வளவு சாதனைகள் செய்தும் அஸ்வினை நாம் குறை கூறுகிறோம் - இந்திய முன்னாள் வீரர் வேதனை
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார். குறிப்பாக முதல் இன்னிங்சில் 144 - 6 என இந்தியா தடுமாறியபோது சதமடித்து 113 ரன்கள் குவித்த அவர், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
அத்துடன் இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய சாதனையாளர் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவை (இவரும் 37 முறை) சமன் செய்தார். மேலும் இந்தியாவுக்காக டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை அதிக வயதில் வீழ்த்தியவர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
ஆனால் இவ்வளவு சாதனைகளை செய்தும் வெளிநாட்டில் அசத்துவதில்லை என்று அஸ்வினை இந்திய அணி குறை கூறுவதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவருடைய சில சாதனைகள் மிகவும் குதூகலகமாக இருக்கிறது. அவரை ஆல் ரவுண்டர்கள் மத்தியில் நாம் சேர்க்க வேண்டும். ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர் இயன் போத்தமுக்கு பின்னால் இருக்கிறார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலை பற்றி பேசும் போது அதில் அவர் 8வது இடத்தில் உள்ளார். 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த பவுலர்களின் பட்டியலில் அவருக்கு முன்பாக டேல் ஸ்டெயின் மட்டுமே இருக்கிறார்.
இருப்பினும் சில நேரங்களில் அஸ்வின் இதை நன்றாக செய்யவில்லை அதை அவர் நன்றாக செய்திருக்கலாம் என்று நாம் நியாயமின்றி பேசுகிறோம். இந்திய அணியில் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்கள் இல்லாத பட்சத்தில் அவர்களை நீக்கி விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அனில் கும்ப்ளே இல்லாமல் உங்களால் விளையாட முடியாது. அதே போல சொந்த மண்ணில் தாம் இல்லாமல் இந்தியா ஒரு தொடரில் விளையாட முடியாது என்ற நிலையை அஸ்வின் கைப்பற்றி விட்டார் என்று நினைக்கிறேன்" என கூறினார்.