நாம் கிரிக்கெட்டை பொழுதுபோக்காக பார்க்கிறோம்... அதனாலேயே நம்மால்.. - பாக். முன்னாள் வீரர் கருத்து
ஐ.பி.எல். முதல் சர்வதேசம் வரை இந்தியாவை தற்சமயத்தில் பாகிஸ்தானால் நெருங்க முடியாது என்று ரசித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
கராச்சி,
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. டி20 பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது.
குறிப்பாக முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் இந்தியாவிடம் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இது போக சமீப காலங்களில் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான் மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். முதல் சர்வதேசம் வரை இந்தியாவை தற்சமயத்தில் பாகிஸ்தானால் நெருங்க முடியாது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரசித் லத்தீப் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"அவர்களின் திரைத் துறையை போலவே இந்தியா கிரிக்கெட்டிலும் முன்னேறியுள்ளது. நாம் கிரிக்கெட்டை பொழுது போக்காக பார்க்கிறோம். அதனாலேயே நம்மால் அதை வியாபாரமாக மாற்ற முடியவில்லை. அதனாலேயே பி.எஸ்.எல். எங்கு துவங்கியதோ அங்கேயே இன்னும் நிற்கிறது. அத்தொடரில் நட்சத்திர வீரருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் வெறும் 1.40 மில்லியன் டாலர்கள். அதை ஏன் நம்மால் முன்னோக்கி நகர்த்த முடியவில்லை?
ஏன் நம்மால் பேட் கம்மின்ஸ் அல்லது மிட்செல் ஸ்டார்க் போன்றவர்களை கொண்டு வர முடியவில்லை? ஏனெனில் நம்மிடம் பணமில்லை. எனவே வியாபாரமும் இல்லை. இந்தியா ஒன்றும் சமீப காலத்தில் மட்டும் உலக கிரிக்கெட்டின் சக்தியாக உருவெடுக்கவில்லை. 2007, 2011, 2015 காலகட்டங்களில் அவர்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களிடமிருந்து நிறைய பாடங்களைக் கற்றனர். மேலும் கவனிக்கப்படாத அடிப்படைகளில் வேலை செய்தனர். அதன் பின்பே ஐ.பி.எல். வந்தது. அதன் காரணமாக தற்போது அவர்களிடம் சிறந்த ரிக்கி பாண்டிங், ஹசி, ப்ராவோ போன்ற சிறந்த அறிவைக் கொண்டவர்கள் இருக்கின்றனர்" என்று கூறினார்.