எப்போது டிக்ளேர் செய்வோம் என்பதை ரிஸ்வானிடம் ஏற்கனவே கூறிவிட்டோம் - பாக். துணை கேப்டன்


எப்போது டிக்ளேர் செய்வோம் என்பதை ரிஸ்வானிடம் ஏற்கனவே கூறிவிட்டோம் - பாக். துணை கேப்டன்
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 23 Aug 2024 5:27 AM GMT (Updated: 23 Aug 2024 5:28 AM GMT)

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இன்னிங்சில் ரிஸ்வான் 171 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 41 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் அடித்திருந்தது. சவுத் ஷகீல் 57 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. முகமது ரிஸ்வான் 171 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2ம் நாள் ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் ரிஸ்வான் இரட்டைசதம் அடிக்க 29 ரன்களே தேவைப்பட்ட போது பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இன்னிங்சை டிக்ளேர் செய்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு பாகிஸ்தான் துணை கேப்டன் சவுத் ஷகீல் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, நாங்கள் எப்போது டிக்ளேர் செய்வோம் என்பதை ரிஸ்வானிடம் ஏற்கனவே கூறிவிட்டோம் என சவுத் ஷகீல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரிஸ்வான் இரட்டை சதத்தை பொறுத்தவரை நாங்கள் விரைவாக அந்த முடிவை (டிக்ளேர் முடிவு) எடுக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்பு நாங்கள் எப்போது டிக்ளேர் செய்வோம் என்பதை முகமது ரிஸ்வானிடம் கூறிவிட்டோம். அவருக்கு நிச்சயம் நாங்கள் எப்போது டிக்ளேர் செய்வோம் என்பது தெரியும். நாங்கள் 450 ரன்களை நெருங்கும்போது டிக்ளேர் செய்வோம் என அவரிடம் சொல்லி இருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story