நாங்கள் சிங்கங்கள்...அதனாலேயே - ஹர்பஜனுக்கு சவால் விடுத்த பாக். முன்னாள் வீரர்
2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
கராச்சி,
2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய அணி ஆசிய கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதி வருகிறது.
இந்நிலையில் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு பேசி இருந்த ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு நிலையற்றதாக இருக்கிறது என்றும், அங்கு தினந்தோறும் ஏதாவது நடைபெறுகிறது என்றும், எனவே வீரர்களின் நலனை விட பெரிது எதுவும் கிடையாது, இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதை ஆதரிப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறிய கருத்துக்கு சவால் விடுக்கும் விதமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்கள் சிங்கங்கள். நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்து கிரிக்கெட் விளையாடினோம். அதே போல நீங்களும் இங்கே வந்து விளையாடுங்கள். எங்கள் நாட்டுக்கு வந்து விளையாட உங்களை வரவேற்கிறோம். நாங்கள் உங்களுக்கு போதுமான பாதுகாப்பு உட்பட அனைத்தையும் கொடுப்போம்.
எங்கள் நாட்டுக்கு வாருங்கள். இருப்பினும் இதைப் பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர். பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே வெற்றி தோல்வியை பார்க்காமல் எப்படி விளையாடுகிறோம் என்பதை சிந்திக்காமல் அனைத்து இடங்களுக்கும் சென்று விளையாடுகின்றனர். பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் இந்தியா சென்று விளையாடி திரும்பி வருகிறார்கள். இதைத் தான் நீங்கள் தைரியமான அணி, தைரியமான வீரர்கள் என்று சொல்வீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.