விராட் கோலி தான் எனது ரோல் மாடல் - சாம் கான்ஸ்டாஸ்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அதன்பின்னர் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்தியா தொடரை இழக்க விராட், ரோகித், சுப்மன் கில் போன்ற வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் 4வது போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அவர் பும்ராவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்தபோது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கான்ஸ்டாஸ் நடந்து வந்தார். அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள். ஆனால் அந்த இடத்தில் விராட் கோலிதான் வேண்டுமென்றே கான்ஸ்டாஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 20 சதவீதம் அபராதமும், ஒரு கருப்பு புள்ளியும் வழங்கி தண்டனை விதித்தது.
இந்நிலையில், விராட் கோலி என்னுடைய ரோல் மாடல் என ஆஸ்திரேலியாவின் சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, போட்டி (மெல்போர்ன் டெஸ்ட்) முடிந்ததும் விராட் கோலியுடன் நான் கொஞ்சம் பேசினேன். அப்போது நான் உங்களை ரோல் மாடலாக கொண்டுள்ளேன் என்பதை சொன்னேன். கண்டிப்பாக அவருக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய கவுரவம்.
அவருக்கு எதிராக விளையாடிய போது 'வாவ் விராட் கோலி பேட்டிங் செய்கிறார்' என்ற வகையில் நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். களத்தில் அவர் இருக்கும் போது இந்திய ரசிகர்கள் அவருடைய பெயரை சத்தமாக உச்சரித்தார்கள். அந்த தருணம் நம்ப முடியாததாக இருந்தது. அன்பான நபர்.
அடுத்ததாக நடைபெறும் இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக செயல்படுங்கள் என்று எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். எங்களுடைய மொத்த குடும்பமும் விராட் கோலியை விரும்புகிறது. இளம் வயதிலிருந்தே அவரை நான் ரோல் மாடலாக கொண்டுள்ளேன். அவர் இந்த விளையாட்டின் லெஜெண்ட். இவ்வாறு அவர் கூறினார்.