விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாபை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய மராட்டியம்
மராட்டியம் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷின் குல்கர்னி 107 ரன்கள் அடித்தார்.
வதோதரா,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மராட்டியம் அணி, அபிஷேக் சர்மா தலைமையிலான பாஞ்சாபை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மராட்டிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் கெய்க்வாட் 5 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய சித்தேஷ் வீர் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இந்த நெருக்கடியான சூழலில் ஜோடி சேர்ந்த அர்ஷின் குல்கர்னி - அங்கித் பாவனே சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
அங்கித் பாவனே 60 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஷின் குல்கர்னி சதமடித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் நிகில் நாயக் (52 ரன்கள்) அதிரடியாக விளையாடி அணி வலுவான நிலையை எட்ட உதவினார்.
50 ஓவர்கள் முடிவில் மராட்டியம் 6 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அர்ஷின் குல்கர்னி 107 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 276 ரன்கள் ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்களான பிரம்சிம்ரன் சிங் (14 ரன்கள்) அபிஷேக் சர்மா (19 ரன்கள்), நேகல் வதேரா (6 ரன்கள்),ரமந்தீப் சிங் (2 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினர்.
44.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மராட்டியம் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 49 ரன்கள் அடித்தார். மராட்டியம் தரப்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அர்ஷின் குல்கர்னி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.